Press "Enter" to skip to content

என்னை மகிளா காங்கிரஸ் தலைவியாக்கும் திட்டம் இருப்பதாக தெரியவில்லை- ஜோதிமணி எம்.பி.

மகிளா காங்கிரஸ் தலைவி பதவியை கேட்கவில்லை என்றும், அப்படி ஒரு திட்டம் தலைமையில் இருப்பதாக தெரியவில்லை என்றும் ஜோதிமணி எம்பி தெரிவித்துள்ளார்.

கரூர்:

தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் கரூர் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான ஜோதிமணி தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக நியமிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் தலைமையிலிருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை.

இது பற்றி ஜோதிமணி எம்.பி.யிடம் மாலைமலர் நிருபர் கேட்டபோது அவர் கூறியதாவது:-

கடந்த 3 வருடங்களுக்கு முன்பு என்னை தமிழக மகிளா காங்கிரஸ் தலைவியாக்க ஒரு திட்டம் தயாரானது. அப்போது நான் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தியதால் விரும்பவில்லை. இது பற்றி தலைமைக்கும் தெரிவித்தேன்.

இப்போதும் நான் மகிளா காங்கிரஸ் தலைவி பதவியை கேட்கவில்லை. அப்படி ஒரு திட்டம் தலைமையில் இருப்பதாகவும் எனக்கு தெரியவில்லை என்றார்.

மேலும் டெல்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது பற்றி கேட்டதற்கு, இந்தியாவின் பல மாநிலங்களில் காங்கிரஸ் அமைப்பு ரீதியாக வலு விழந்து காணப்படுகிறது. பூத் கமிட்டி , வட்டார கமிட்டி ஆகியவற்றினை தேர்தல் காலங்களில் சீரிய முறையில் அமைக்க வேண்டும் . முதல்வர் வேட்பாளர்களையும் தேர்தலுக்கு முன்பே அறிவித்து விடவேண்டும்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ,சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் அமைப்பு ரீதியான சிக்கல்கள் இருந்தன. அதனை சரி செய்து விட்டதால் தேர்தலில் வெற்றிபெற முடிந்தது .டெல்லி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் அமைப்பு ரீதியாக கட்சியை கட்டமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். அதைச் செய்தால் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலுக்கு பின்னர் நடைபெற்ற மாநில சட்டமன்ற தேர்தல்களில் தொடர்ந்து பா.ஜ.க. தோல்வியடைந்து வருகிறது. அந்த நிலை காங்கிரசுக்கு இல்லை. காங்கிரஸ் எழுச்சி பெற்று வருகிறது .

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »