Press "Enter" to skip to content

ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்: சிவசேனாவுக்கு பட்னாவிஸ் பதிலடி

எங்களுக்கு சவால் விடுவதை தவிர்த்துவிட்டு, ஆட்சியை கலைத்து விட்டு தேர்தலை சந்தித்தால் சிவசேனாவுக்கான இடத்தை மக்கள் காட்டுவார்கள் என சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை

நவிமும்பை நெருலில் நடந்த பாரதீய ஜனதா மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் பேசியதாவது:-

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து குழப்பத்தை உருவாக்குகிறார். இது தொடர்பாக அவர் மத்திய அரசுக்கு எதிராக கருத்து போரை நடத்தி வருகிறார். குடியுரிமை சட்டத்தால் சில சமூகத்தினரின் குடியுரிமை பறிக்கப்படும் என தவறான தகவல் பரப்பப்படுகிறது.

இந்த சட்டத்தின் மூலம் மராட்டியத்தில் உள்ள ஏழைகள் மற்றும் நாடோடி பழங்குடியினரின் குடியுரிமையை பறிக்க போகிறது என எதிர்க்கட்சிகள் நிரூபிக்க வேண்டும் அல்லது தங்களது தவறான பிரசாரத்துக்காக பிரதமர் மோடியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இனி நடக்கும் தேர்தல்களில் பாரதீய ஜனதா தனித்து போட்டியிடும். இதன்படி நவிமும்பை மாநகராட்சிக்கு நடக்கும் தேர்தலில் தனித்து போட்டியிட்டு பாரதீய ஜனதா வெற்றி பெறும்.

காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து வீர சாவர்க்கரை அவமதிக்கிறார்கள். இதை சிவசேனா தலைமை எவ்வளவு காலம் சகித்துக் கொள்ளப் போகிறது. சிவசேனாவுக்கு கொஞ்சமாவது தைரியம் இருந்தால் வீரசாவர்க்கர் பற்றிய சர்ச்சை கட்டுரையை வெளியிட்ட காங்கிரசின் ஷிடோரி பத்திரிகையை தடை செய்ய வேண்டும்.

சிவசேனா கூட்டணி அரசாங்கத்தை கவிழ்க்க முடியுமா என பாரதீய ஜனதாவுக்கு சாவல் விடுவதற்கு பதிலாக, சிவசேனா தன்னுடைய தலைமையிலான ஆட்சியை கலைத்து விட்டு புதிதாக தேர்தலை எதிர்கொள்ள வேண்டும். அப்போது சிவசேனாவுக்கான இடத்தை மராட்டிய மக்கள் காண்பிப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »