Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) எதிரொலி – சீன நாடாளுமன்ற கூட்டத்தை ரத்து செய்ய பரிசீலனை

சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலித்து வருகிறது.

பீஜிங்:

சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அடுத்த மாதம் தொடக்கத்தில் அங்கு நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தை ரத்து செய்ய அரசு பரிசீலித்து வருகிறது.

சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகரான உகானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கொரோனா வைரஸ், தற்போது சீனாவை மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடுமையாக மிரட்டி வருகிறது. இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், பலியானோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சீன மருத்துவத்துறையும், அரசும் செய்வதறியாது திகைத்து வருகின்றன.

சீனாவில் இந்த வைரசுக்கு மேலும் 105 பேர் பலியாகி இருப்பதாக தேசிய மருத்துவ கமிஷன் (என்.எச்.சி.) நேற்று தெரிவித்தது. இதில் 100 பேர் ஹுபெய் மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதன் மூலம் சீனாவில் கொரோனா வைரசுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,770 ஆகி விட்டது.

இதைப்போல புதிதாக 2,048 பேருக்கு கொரோனா வைரஸ் தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்களையும் சேர்த்து வைரஸ் பாதிப்புக்கு உள்ளாகி இருப்போரின் எண்ணிக்கை 70,548 ஆகி விட்டது. மேலும் 7,264 பேருக்கு வைரஸ் அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டு உள்ளது. அதேநேரம் வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 10,844 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கின்றனர்.

இதைப்போல வைரஸ் தாக்குதலின் வீரியம் தற்போது குறைய தொடங்கி இருப்பதாக என்.எச்.சி. அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலின் மையப்பகுதியான உகானில், பாதிப்பின் வேகம் கடந்த மாதம் 28-ந் தேதி 32.4 சதவீதமாக இருந்த நிலையில், கடந்த 15-ந் தேதி அது 21.6 சதவீதமாக குறைந்திருப்பதாக அவர்கள் கூறினர்.

எனினும் வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு தொடர்ந்து முடுக்கி விட்டு உள்ளது. குறிப்பாக ஹுபெய் மாகாணத்தில் 5 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் 18 நகரங்கள் கடந்த 23-ந் தேதியில் இருந்து தொடர்ந்து மூடப்பட்டு உள்ளன. மேலும் அத்தியாவசிய தேவைகள் இல்லாத பொது இடங்களை மூடவும், மாகாணம் முழுவதும் அவசர ஊர்திகளை தவிர பிற வாகன போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகளும் தற்போது விதிக்கப்பட்டு உள்ளன.

இதைப்போல மாகாணம் முழுவதும் ஒருவரையும் விடாமல் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யுமாறு உள்ளூர் நிர்வாகத்துக்கு மாகாண அரசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. மேலும் உள்ளூர் நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் நிறுவனங்கள் எதுவும் உற்பத்தியை தொடங்கக்கூடாது எனவும், மீண்டும் திறக்கும் நிறுவனங்கள் கூட கடுமையான வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதற்கிடையே சீன நாடாளுமன்றத்தின் வருடாந்திர கூட்டம் அடுத்த மாதம் (மார்ச்) 5-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. 2 அமர்வுகள் கொண்ட இந்த நாடாளுமன்ற கூட்டத்தை, பட்ஜெட் தாக்கலுக்கும், தனது அரசியல் செயல்திட்டத்தை வகுப்பதற்கும் முக்கியமான கூட்டமாக ஆளும் கம்யூனிஸ்டு கட்சி கருதுகிறது.

ஆனால் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரசின் கோரத்தாண்டவம் அதிகரித்து வருவதால் இந்த கூட்டத்தை ரத்து செய்வது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அப்படி இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டால் அது வரலாற்றிலேயே முதல் முறையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »