Press "Enter" to skip to content

7 பேரின் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார்: எடப்பாடி பழனிசாமி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைவாசிகளாக இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலையில் கவர்னர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புவதாக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

சென்னை :

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் பேசும்போது நடந்த விவாதம் வருமாறு:-

துரைமுருகன்:- ராஜீவ்காந்தி கொலை வழக்கு சிறைவாசிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனமாக செயல்படுகிறது. தர்மபுரி பஸ் எரிப்பு விவகாரத்தில் அ.தி.மு.க. கட்சிக்காரர் மாட்டிக்கொண்ட விவகாரத்தில் அவர்களின் விடுதலைக்கு உடனடியாக அரசு செயல்பட்டது.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- 7 பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பது இந்த அரசின் கொள்கை. அவர்கள் விடுதலை பற்றி கவர்னர் முடிவு செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதுமே காலதாமதம் செய்யாமல் அமைச்சரவையைக் கூட்டி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று தீர்மானத்தை இந்த அரசு அனுப்பி வைத்தது.

அவர்களின் விடுதலைக்காக மாநிலத்திற்கு இருக்கும் அதிகாரம் முழுவதுமாக பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இதில் கவர்னர் முடிவெடுப்பதற்கான கால நிர்ணயம் எதுவும் இல்லை. அதற்கான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பும் இல்லை. அரசியல் சாசனத்திலும் காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை. அதன்படி கவர்னரின் நல்ல முடிவை அரசு எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறது.

ஆனால் இதே பேரறிவாளனின் கருணை மனு உங்கள் ஆட்சியில் தரப்பட்டபோது நளினி தவிர மற்ற 6 பேரையும் தூக்கிலிடலாம் என்ற தீர்மானத்தை நிறைவேற்றினீர்கள் என்பதை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்:- அமைச்சரின் விளக்கத்தை ஏற்கிறேன். ஏன் கவர்னர் முடிவெடுக்கவில்லை? என்ற கேள்வியைக் கேட்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று சுப்ரீம் கோர்ட்டு கருத்து கூறியிருக்கிறது. அந்த அடிப்படையில் கவர்னரிடம் இந்த அரசு கேட்டிருக்கிறதா? அவரை வலியுறுத்தும் சூழ்நிலையை எடுத்தீர்களா?

அமைச்சர் சி.வி.சண்முகம்:- அதில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்கவில்லை. குறிப்பிட்ட காலத்துக்குள் விடுதலை செய்ய வேண்டும் என்று கவர்னரிடம் கேட்க சொல்லவில்லை. கவர்னரின் அதிகாரத்தைப் பற்றி நாங்கள் பேசவிரும்பவில்லை என்றும், இதுபற்றி கவர்னரிடம் கேட்டு எங்களிடம் தெரிவியுங்கள் என்றும் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

துரைமுருகன்:- 28 ஆண்டுகளாக சிறையில் வாடுகிறார்கள். எனவே மனிதாபிமான அடிப்படையில், அரசு தனது அதிகாரத்தை, செல்வாக்கை பயன்படுத்தி, முதல்-அமைச்சரோ அல்லது அவரது சார்பில் அதிகாரிகளையோ கவர்னரிடம் அனுப்பி பேசி, விடுதலை செய்ய வேண்டும்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி:- எங்களுக்கு அக்கறை இருப்பதால்தான் அவர்களை பரோலில் வெளியே அனுப்பினோம். அதற்கு முன்பு யாருமே அவர்களை பரோலில் விடவில்லை. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

எங்கள் அதிகாரத்துக்கு உள்பட்டு அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அவர் நிச்சயமாக நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம். கவர்னர் முடிவு எடுப்பார் என்று மத்திய அரசும் கூறிவிட்டது.

நாங்களும், நீங்களும், நாட்டு மக்களும் விடுதலையை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். எனவே கவர்னர் நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம்.

தர்மபுரி வழக்கில் சிக்கியவர்களையும், எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அறிவித்துத்தான் விடுதலை செய்தார்கள். தனிச்சிறப்பு கொடுத்து விடுவிக்கவில்லை. இது வேறு வழக்கு, அது வேறு வித்தியாசமான வழக்கு. இரண்டையும் இணைக்க வேண்டாம்.

கைதியை முன்கூட்டி விடுதலை செய்வதில் சுப்ரீம் கோர்ட்டும் விதிமுறைகளை வகுத்துள்ளது. அவற்றுக்கு உட்பட்டுதான் விடுதலை செய்ய முடியும்.

துரைமுருகன்:- அவர்களின் விடுதலைக்கு கவர்னருக்கு அழுத்தத்தைக் கொடுங்கள். அவர்களின் விடுதலைக்கு பிறகுதான் தமிழகத்தில் நிம்மதி பெருமூச்சு விடமுடியும்.

அமைச்சர் சி.வி.சண்முகம்:- தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கை பொறுத்தவரை, அந்த சிறைவாசிகள் அ.தி.மு.க.வினர் என்பதால் வெளியே விடவில்லை. எம்.ஜி.ஆர். நூற்றாண்டை முன்னிட்டு, 10 ஆண்டுகள் சிறைவாசம் முடித்தவர்களை முன்கூட்டி விடுதலை செய்யலாம் என்ற அடிப்படையில்தான் விடுதலை செய்யப்பட்டனர்.

மாணவிகளை கொலை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அவர்கள் பஸ்சை எரிக்கவில்லை என்று கூறி அந்த குற்றத்தில் இருந்து அவர்களை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. பஸ்சை எரித்ததற்கு மட்டுமே அவர்களுக்கு சிறைவாசம் விதிக்கப்பட்டது. 13 ஆண்டுகாலம் அவர்கள் சிறையில் இருந்துவிட்டனர்.

ஆனால் உங்கள் கூட்டணி கட்சியைச் சேர்ந்த லீலாவதி என்ற கவுன்சிலரை கொலை செய்தவரை அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 5 ஆண்டுகளிலேயே முன்விடுதலை செய்தீர்கள். எந்த அடிப்படையில் அதைச் செய்தீர்கள்?

துரைமுருகன்:- நீங்கள் சொன்ன அதே காரணம்தான் அதற்கும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »