Press "Enter" to skip to content

திருச்செந்தூரில் இன்று மருத்துவர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார்

திருச்செந்தூரில் இன்று நடைபெறும் கோலாகல விழாவில், பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். விழாவில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

திருச்செந்தூர்:

தமிழ் பத்திரிகை உலகில் முடிசூடா மன்னராக திகழ்ந்தவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார். கல்வி, விளையாட்டு, ஆன்மிகம் மற்றும் சமுதாய மேம்பாட்டு பணிகளுக்கு அவர் செய்துள்ள சேவைகள் ஏராளம். இதற்காக அவர் பல்வேறு பட்டங்கள், விருதுகள், பரிசுகளை பெற்று உள்ளார்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு 2008-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்த நிலையில், தமிழக அரசு 2017-ம் ஆண்டு, திருச்செந்தூரில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக அறிவித்தது. அதாவது, தூத்துக்குடியில் நவம்பர் மாதம் 22-ந் தேதி நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்” என்று அறிவித்தார்.

இதற்காக, திருச்செந்தூர் அருகே வீரபாண்டியபட்டணத்தில் 60 சென்ட் நிலம் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 2018-ம் ஆண்டு ஜூலை மாதம் 31-ந் தேதி மணிமண்டபம் கட்டுவதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் மாதம் 26-ந் தேதி நடைபெற்ற கோலாகல விழாவில், மணிமண்டபம் கட்டுவதற்கு சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்ட அரசு சார்பில் ரூ.1 கோடியே 34 லட்சத்து 28 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு, அவரது முழு உருவச்சிலையுடன் மணிமண்டபம் கட்டும் பணிகள் தொடங்கின. அதில், பூங்கா, நூலகத்துடன் பார்வையாளர்களுக்கான அனைத்து வசதிகளையும் செய்யும் பணிகள் நடைபெற்றன.

மணிமண்டப கட்டுமானப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், கடந்த மாதம் (ஜனவரி) 29-ந் தேதி செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், பேட்டி அளித்த அவர், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம் பிப்ரவரி மாதம் 22-ந் தேதி திறக்கப்படும் என்றும், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் வந்து திறந்து வைப்பார் என்றும் அறிவித்தார்.

அதன்படி, திருச்செந்தூர் வீரபாண்டியபட்டணத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 10.45 மணிக்கு நடைபெறும் கோலாகல விழாவில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைக்கிறார். தொடர்ந்து, அங்குள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் அமைக் கப்பட்டுள்ள மேடைக்கு அவர் வருகிறார்.

காலை 11 மணிக்கு விழா தொடங்குகிறது. விழாவுக்கு துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். தமிழக அரசின் தலைமைச் செயலாளர் க.சண்முகம் அனைவரையும் வரவேற்கிறார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் மகேசன் காசிராஜன் திட்ட விளக்கவுரை ஆற்றுகிறார். தொடர்ந்து, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை உரையாற்றுகிறார். அமைச்சர் கடம்பூர் ராஜூ, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை உரையாற்றுகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள கல்வெட்டை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைக்கிறார். மேலும், தூத்துக்குடி மாவட்ட புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். தொடர்ந்து, விழாப் பேருரை ஆற்றுகிறார்.

அதனைத் தொடர்ந்து, பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் குடும்பத்தின் சார்பில் ‘தினத்தந்தி’ இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் நன்றி தெரிவித்து பேசுகிறார். நிறைவாக, தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நன்றி கூறுகிறார்.

விழாவில், அமைச்சர்கள், சட்டசபை துணை சபாநாயகர், அரசு தலைமைக் கொறடா, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி, எம்.பி. – எம்.எல். ஏ.க்கள், வாரியத் தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்கின்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »