Press "Enter" to skip to content

பாலின நீதி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடைய முடியாது – பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

பாலின நீதி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடைய முடியாது என்று சர்வதேச நீதித்துறை கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

புதுடெல்லி:

டெல்லி சுப்ரீம் கோர்ட்டு வளாகத்தில் நேற்று சர்வதேச நீதித்துறை கருத்தரங்கை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். விழாவில் அவர் பேசும்போது கூறியதாவது:-

சட்டமே உயர்ந்தது. மக்கள் நீதித்துறை மீது பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர். சமுதாய மாற்றத்துக்கு சட்டத்தின் ஆட்சியே அடிப்படை. அரசியல்சாசனத்தின் மூன்று தூண்களான நிர்வாகம், நாடாளுமன்றம் மற்றும் நீதித்துறை ஆகியவை நாட்டை சரியான பாதையில் கொண்டுசெல்கிறது.

இந்தியாவில் இதுபோன்ற உயர்ந்த பாரம்பரியத்தை உருவாக்கியதற்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். கடந்த 5 ஆண்டுகளில் நாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களில் இந்த பாரம்பரியம் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கருத்தரங்கில் ‘பாலின உலகம்’ என்ற தலைப்பிலும் விவாதிக்கப்படுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். பாலின நீதி இல்லாமல் உலகில் எந்த நாடும் முழுமையாக வளர்ச்சி அடைய முடியாது. இந்திய அரசு பாலின சமத்துவம் மற்றும் நீதிக்கு அனைத்து முயற்சிகளும் எடுத்துள்ளது.

ராணுவத்தில் பெண்களை நியமிப்பது, போர் விமானங்களில் பெண்களை நியமிக்க தேர்வு செய்யும் முறை, சுரங்கங்களில் இரவு நேரத்தில் பெண்கள் பணிபுரியும் சுதந்திரம் ஆகியவைகளில் அரசு பல மாற்றங்களை செய்துள்ளது. இந்தியா, பெண்களுக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ள நாடு. இந்திய அரசு பெண்கள் பிரச்சினை தொடர்பான சட்டங்களை அமல்படுத்த இயன்ற அளவு நடவடிக்கை எடுத்துள்ளது.

உதாரணமாக முத்தலாக் தடுப்பு, திருநங்கைகள் உரிமைகள், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் ஆகியவைகளில் அரசு தீவிர கவனம் செலுத்திவருகிறது.

இந்தியாவில் முதல் முறையாக கல்வி நிலையங்களில் மாணவர்களைவிட மாணவிகள் அதிகளவில் சேர்ந்துள்ளனர். பெண் குழந்தைகளை காப்போம் போன்ற திட்டங்கள் வெற்றிகரமாக செயல்படுத்தப்படுவதே இதற்கு காரணம். மத்திய அரசு 1,500 பொருத்தமற்ற சட்டங்களை நீக்கிவிட்டு, புதிய சட்டங்களை இயற்றியுள்ளது.

வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள சமநிலையின் முக்கியத்துவத்தை இந்திய நீதித்துறை உணர்ந்திருப்பதற்காக நான் நன்றி தெரிவிக்கிறேன். இந்த பிரச்சினைகளை பொதுநல மனுக்கள் மூலமாக நீதித்துறை சமச்சீர்படுத்தி வருகிறது. நீதித்துறை சேவைகளை திறம்பட வழங்குவதில் தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க வேண்டும்.

இ-கோர்ட்டு சேவைகள், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துதல் ஆகியவை போன்ற தொழில்நுட்பங்களை நீதித்துறையில் சேர்க்க வேண்டும். நாட்டில் உள்ள அனைத்து கோர்ட்டுகளையும் ‘இ-கோர்ட்டு ஒருங்கிணைப்பு திட்டம்’ மூலம் இணைக்க அரசு முயற்சித்து வருகிறது.

சமீபகாலங்களில் சுப்ரீம் கோர்ட்டு எடுத்த சில பெரிய முடிவுகள் உலகம் முழுவதும் விவாதப்பொருளாக மாறியது. இந்த முடிவுகள் குறித்து ஏராளமான சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால் என்ன நடந்தது? 130 கோடி இந்தியர்களும் நீதித்துறை வழங்கிய இந்த முடிவுகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர்.

இந்தியா 5, 6 ஆண்டுகளுக்கு முன்பு உலகின் 11-வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. ஆனால் இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இது இந்தியாவின் உள்கட்டமைப்பு வளர்ச்சியை காட்டுகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

கருத்தரங்கில் சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பேசும்போது, ‘‘பயங்கரவாதிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் தனியுரிமை பற்றி பேசுவதற்கு உரிமை இல்லை. இதுபோன்ற நபர்களை நீதித்துறையை தவறாக விமர்சிப்பதற்கு அனுமதிக்கக்கூடாது. நிர்வாகத்தை தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமும், தீர்ப்புகளை நீதிபதிகளிடமும் விட்டுவிட வேண்டும்’’ என்றார்.

கருத்தரங்கில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே உள்ளிட்ட நீதிபதிகள், வெளிநாட்டு நீதிபதிகள் கலந்துகொண்டனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »