Press "Enter" to skip to content

கடலூர், நாகை மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு திட்டம் ரத்து – மருத்துவர் ராமதாஸ் வரவேற்பு

கடலூர், நாகை மாவட்டங்களில் அமைய இருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டல திட்டத்தை ரத்து செய்து தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதற்கு டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கடலூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 57,345 ஏக்கர் பரப்பளவில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான திட்டத்தை தமிழக அரசு ரத்துசெய்து இருக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களின் வேளாண் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக இருந்த இத்திட்டங்கள் ரத்துசெய்யப்பட்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

இது பா.ம.க.வின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாகும். தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலால் கடுமையாக பாதிக்கப்பட்ட 5 மாவட்டங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டால் அதில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் கண்டிப்பாக இடம்பெற்று இருக்கும்.

கடலூர் மாவட்டத்தில் சிப்காட் வளாகத்தில் செயல்பட்டு வரும் ரசாயன ஆலைகள் மற்றும் நாகை மாவட்டத்தில் உள்ள ஏராளமான மின்சாரத் திட்டங்கள், கச்சா எண்ணெய் எடுக்கும் திட்டங்களால் மக்களுக்கு பாதிப்புகள் நிறைய உள்ளன. இத்தகைய சூழலில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டால் இந்த 2 மாவட்டங்களில் விவசாயம் அழிந்து போயிருக்கும்.

அத்திட்டம் கைவிடப்பட்டு இருப்பதன் மூலம் இரு மாவட்டங்களும் காப்பாற்றப்பட்டு உள்ளன. இதற்காக தமிழக அரசுக்கு பா.ம.க. நன்றி தெரிவித்துக் கொள்கிறது. விவசாயத்தை பாதிக்கும் இத்திட்டத்தை கைவிடச் செய்து விவசாயத்தைக் காப்பாற்றியதில் பா.ம.க. பெருமிதம் அடைகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »