Press "Enter" to skip to content

தாஜ்மகாலை பார்த்து பிரமித்த டிரம்ப் – ‘இந்திய கலாசாரத்தின் வாழும் உதாரணம்’

தாஜ்மகாலை பார்த்து பிரமித்த டிரம்ப், இந்தியாவின் மாறுபட்ட கலாசாரத்தின் வாழும் உதாரணம் அது என புகழாரம் சூட்டினார்.

ஆக்ரா:

2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஆமதாபாத்தில் தனது நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மனைவி மெலனியா, மகள் இவாங்கா உள்ளிட்டோருடன் விமானத்தில் தாஜ்மகாலுக்கு புறப்பட்டார். மாலை 5 மணிக்கு ஆக்ராவில் உள்ள விமானப்படை தளத்தில் வந்திறங்கிய அவர்களை உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், கவர்னர் ஆனந்தி பென் படேல் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அப்போது அங்கே குழுமியிருந்த 250-க்கும் மேற்பட்ட கலைஞர்கள், மாநிலத்தின் கலாசாரத்தை பறைசாற்றும் கலைநிகழ்ச்சிகளை நடத்தி டிரம்ப் தம்பதியை வரவேற்றனர். இந்த கலை நிகழ்ச்சிகளை வெகுவாக ரசித்த டிரம்ப், பின்னர் அங்கிருந்து கார் மூலம் தாஜ்மகாலுக்கு சென்றார்.

தாஜ்மகாலை அடைந்ததும் அவர்களை அதிகாரிகள் வரவேற்று அழைத்து சென்றனர். காதலின் சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் அந்த ஒப்பற்ற பளிங்கு மாளிகையை அவர்கள் அங்குலம், அங்குலமாக ரசித்தனர். தாஜ்மகாலின் மேன்மையையும், முகலாய கட்டிடக்கலையையும் சுற்றுலா வழிகாட்டிகள் அவர்களுக்கு எடுத்துரைத்தனர்.

புகழ்பெற்ற தாஜ்மகாலை ஒவ்வொரு கோணத்திலும் ரசித்த டிரம்ப் தம்பதியினர், பல இடங்களில் நின்றுகொண்டு புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர். மறுபுறம் டிரம்பின் மகள் இவாங்கா, மருமகன் குஷ்னர் தம்பதியும் தாஜ்மகாலின் அழகை ரசித்தவாறே புகைப்படமும், செல்பி படங்களும் எடுத்துக்கொண்டனர்.

தாஜ்மகாலை பார்த்து வியந்த டிரம்ப் அங்கே வைக் கப்பட்டிருந்த பார்வையாளர் கள் புத்தகத்தில், தாஜ்மகாலை புகழ்ந்து எழுதினார். அதன்படி, ‘தாஜ்மகால் எங்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் வளமான மற்றும் மாறுபட்ட கலாசாரத்தின் ஒரு வாழும் உதாரணம் இதுவாகும்’ எனறு குறிப்பிட்டார்.

சுமார் ஒரு மணி நேரம் தாஜ்மகாலில் செலவிட்ட டிரம்ப் மற்றும் குடும்பத்தினருக்கு, தாஜ்மகாலின் மிகப்பெரிய ஓவியம் ஒன்றை யோகி ஆதித்யநாத் பரிசளித்தார். பின்னர் அவர்கள் டெல்லி புறப்பட்டு சென்றனர்.

டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆக்ரா நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆக்ரா விமானப்படை தளத்தில் இருந்து தாஜ்மகால் வரையிலும் சாலையோரம் ஏராளமான மக்கள் குழுமி டிரம்ப் குடும்பத்தினரை வரவேற்றனர். 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் 21 இடங்களில் நின்றவாறு நடனம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.

15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இந்தியா-அமெரிக்கா தேசிய கொடிகளை ஏந்தியபடியே சாலையின் இருபுறமும் நின்று கொண்டு அமெரிக்க ஜனாதிபதியை வரவேற்றனர். மேலும் டிரம்ப் சென்ற பாதை நெடுகிலும் பிரமாண்ட வரவேற்பு பேனர்களும் வைத்து விருந்தினர்களை வரவேற்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருந்தது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »