Press "Enter" to skip to content

இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா புறப்பட்டார் டிரம்ப்

தனது இரண்டு நாள் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று இரவு தனி விமானம் மூலம் அதிபர் டிரம்ப் அமெரிக்கா புறப்பட்டார்.

புதுடெல்லி:

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இரு நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்தார். அவருடன் மனைவி மெலனியா டிரம்ப், மகள் இவான்கா டிரம்ப், மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் உயர்மட்டக் குழுவினரும் வந்தனர்.

முதல் நாளன்று சபர்மதி ஆசிரமத்தை டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா டிரம்ப் பார்வையிட்டனர். அவர்களுடன் பிரதமர் மோடியும் சென்றார். 

அதன்பின், அகமதாபாத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் டிரம்பும், மோடியும் உரையாற்றினர். அதைத்தொடர்ந்து, டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்ரா சென்று தாஜ்மகாலை சுற்றிப் பார்த்தனர்.

இரண்டாம் நாளான நேற்று டெல்லியில் உள்ள ஒரு அரசு பள்ளிக்கு சென்ற மெலனியா டிரம்ப் மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடினார். இதைதொடர்ந்து டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் டிரம்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்ப் மற்றும் மெலனியா டிரம்ப் ஆகியோருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

 அவர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி ஆகியோர் உற்சாகமாக வரவேற்றனர். இதன்பின்னர் அதிபர் டிரம்ப் ஜனாதிபதி ஏற்பாடு செய்திருந்த விருந்தில் பங்கேற்றார்.  

இந்நிலையில், தனது இரண்டு நாள் இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று இரவு தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார். அவருடன் மனைவி மெலனியா டிரம்ப் உள்ளிட்ட அனைவரும் அமெரிக்கா புறப்பட்டு சென்றனர்.  

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் இந்த சுற்ற்றுப்பயணத்தின் போது ரூ.21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்யும் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »