Press "Enter" to skip to content

இத்தாலியை தொடர்ந்து ஆஸ்திரியாவிலும் கொரோனா..ஓட்டலுக்கு முத்திரை வைத்த அதிகாரிகள்

ஆஸ்திரியாவில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை செய்துவரும் வரவேற்பாளர்கள் இருவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதால் அந்த ஓட்டலுக்கே அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

வியன்னா:

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பற்றி நாம் அனைவரும் அறிந்ததே. சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா, ஈரான், இத்தாலி, மலேசியா போன்ற 25 நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த வைரஸ் தாக்குதலுக்கு சீனாவில் பலியானோரின் எண்ணிக்கை 2,663 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 77 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடான இத்தாலியில் கொரோனா வைரசுக்கு இதுவரை 7 பேர் உயிரிழந்திருக்கிறார். மேலும், 283 பேருக்கு வைரஸ் பரவி இருப்பதை இத்தாலி சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதற்கிடையில், இத்தாலியின் வெனிசில் இருந்து அண்டைநாடான ஆஸ்திரியாவின் முனிச் நகருக்கு நேற்று முன்தினம் ரெயில் ஒன்று  சென்றுகொண்டிருந்தது. அதில் இரண்டு பயணிகளுக்கு கொரோனா இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால் ஆஸ்திரிய அதிகாரிகள் தங்கள் நாட்டு எல்லைக்குள் ரெயிலை அனுமதிக்க மறுத்துவிட்டனர். 

இதனால் ஆஸ்திரியாவின் எல்லையில் உள்ள இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் பிரின்னீர் பாஸ் நிலையத்திலேயே ரெயில் நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், ஆஸ்திரியாவின் இன்ஸ்பர்க் மாகாணத்தில் அல்பின் நகரில் உள்ள ‘கிராண்ட் ஓட்டல் யூரேபா’ என்ற ஓட்டலில்  வரவேற்பாளர்களாக பணியாற்றிவந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இத்தாலியை சேர்ந்த அந்த இளைஞரும், இளம்பெண்ணும் காதலர்கள் எனவும் அவர்கள் சமீபத்தில் தான் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தங்கள் சொந்த ஊரான இத்தாலியின் லோம்பர்டி மாகாணத்திற்கு சென்று திரும்பியதும் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, வைரஸ் பாதிக்கப்பட்ட இருவரும் பணியாற்றிவந்த ஓட்டலுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும், 108 அறைகளை கொண்ட அந்த ஓட்டலில் இருந்து யாரும் வெளியே செல்லக்கூடாது என்றும் ஓட்டலுக்கு உள்ளே யாரும் வரக்கூடாது எனவும் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.  

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »