Press "Enter" to skip to content

டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணம் செய்த இங்கிலாந்து பயணி கொரோனாவுக்கு பலி

ஜப்பான் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணம் செய்த இங்கிலாந்து பயணி கொரோனா வைரஸ் தாக்கில் உயிரிழந்துள்ளார்.

டோக்கியோ: 

சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் அந்நாடு மட்டுமின்றி உலகின் 40-க்கும் அதிகமான நாடுகளுக்கும் பரவி மக்களுக்கு கடுமையான அச்சத்தை உருவாக்கிவருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவில் இதுவரை 2788 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 78 ஆயிரத்து 824 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஹாங்காங்கில் இருந்து 3 ஆயிரத்து 700-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கடந்த 4-ம் தேதி ஜப்பான் யோகோஹாமா துறைமுகத்துக்கு வந்த டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசு கப்பலில் பலர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கப்பலில் இருந்த 3700-க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டன. 

இந்த பரிசோதனையில் 700-க்கும் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். 

முன்னதாக, சொகுசு கப்பலில் சிக்கித்தவித்த பல பயணிகள் வைரஸ் பரவவில்லை என உறுதியான பின்னர் தங்கள் சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். ஆனாலும், சொந்த நாடுகளுக்கு திரும்பிய பலருக்கும் வைரஸ் பரவியுள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், டைமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பயணி ஜப்பான் நாட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் வைரஸ் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து பயணி நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால், ஜப்பான் சொகுசு கப்பலில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதற்கிடையில் ஜப்பான் நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 63 பேருக்கு வைரஸ் பரவியுள்ளதாகவும் ஜப்பான் சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, வைரஸ் பரவுவதை தடுக்க ஜப்பான் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஒரு வார காலம் மூட அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே உத்தரவிட்டுள்ளார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »