Press "Enter" to skip to content

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் தொடுப்பதற்கு முன் பாகிஸ்தான் 100 முறை யோசிக்கும் – ராஜ்நாத் சிங்

துல்லிய தாக்குதல் மற்றும் பாலகோட் தாக்குதல்கள் மூலம் இந்தியாவுக்கு எதிராக எத்தகைய தாக்குதலும் தொடுப்பதற்கு முன் பாகிஸ்தான் 100 முறை யோசிக்கும் என ராஜ்நாத் சிங் கூறினார்.

புதுடெல்லி:

‘போர் மற்றும் அமைதி சூழலில் வான்படையின் வலிமை’ என்ற தலைப்பில் டெல்லியில் நேற்று கருத்தரங்கு ஒன்று நடந்தது. இதில் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பாகிஸ்தானின் பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார்.

அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:-

இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தல் நிகழ்ந்தாலும் அரசு சரியான முறையில் பதிலடி கொடுக்கும். பயங்கரவாதத்துக்கு எதிரான நமது அணுகுமுறையானது, ராணுவ நடவடிக்கை மற்றும் முதிர்ச்சியான, பொறுப்பு மிகுந்த ராஜதந்திர நடவடிக்கையின் நியாயமான கலவையாக உள்ளது.

புல்வாமா தாக்குதலுக்கு நாம் அளித்த பதிலடியானது, நாட்டின் பாதுகாப்பு திறன் மற்றும் தற்காத்துக்கொள்ளும் உரிமையின் உறுதிப்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தியது. நாட்டுக்கு வெளியே மேற்கொண்ட பதிலடியாக பாலகோட் பயங்கரவாத பயிற்சி முகாம்களில் நாம் நடத்திய வான்வழி தாக்குதல்கள், நமது எதிராளி (பாகிஸ்தான்) பல கோட்பாடுகளை மாற்றி எழுதுவதற்கு தூண்டியுள்ளன.

உரி தாக்குதலுக்கு பதிலடியாக நமது படையினர் பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் மீது நடத்திய துல்லிய தாக்குதலும், பாலகோட் தாக்குதலும் பாகிஸ்தானுக்கு வலுவான செய்தியை கொடுத்திருக்கிறது.

அதாவது எல்லையோர பகுதிகளை, இந்தியாவுக்கு எதிராக குறைவான செலவில் போர் நடத்துவதற்காக உருவாக்கப்படும் பயங்கரவாதிகளின் புகலிடமாக பயன்படுத்த முடியாது என்பதை தெரிவித்து உள்ளது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிராக எத்தகைய தாக்குதலையும் தொடுப்பதற்கு முன் பாகிஸ்தான் 100 முறை யோசிக்கும்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகள் இந்தியாவுடன் தோளோடு தோள் நின்று உதவி செய்கின்றன. அந்தவகையில் பாரீசில் சமீபத்தில் நடந்த சர்வதேச நிதி நடவடிக்கை சிறப்புக்குழு, பாகிஸ்தானுக்கு வலுவான செய்தி ஒன்றை அளித்திருக்கிறது. பாகிஸ்தானுக்கு கூட்டு ராஜதந்திர அழுத்தம் மற்றும் நிதி அழுத்தத்தை அளித்திருப்பதை நாம் கண்டோம்.

இதனால் முக்கிய பிரமுகர்களாகவும், ஹீரோக்களாகவும் நடத்தப்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீது போன்றவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். ஆனால் பயங்கரவாத செயல்களுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்கும் வரை இவை அனைத்தும் போதுமானதாக இருக்காது.

இவ்வாறு ராஜ்நாத் சிங் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய ராஜ்நாத் சிங், பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட வீரர்களுக்கு வணக்கமும் செலுத்தினார். இந்த கருத்தரங்கில் முப்படைகளின் தலைவர் பிபின் ராவத், விமானப்படை தளபதி பதாரியா ஆகியோரும் பேசினர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »