Press "Enter" to skip to content

தீவிபத்து குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை – டிஜிபி சைலேந்திரபாபு

மாதவரம் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை:

திருவள்ளூர் மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள ரசாயனக் கிடங்கில் இன்று மாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கு 10-க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 20-க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம்  வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தீ மளமளவென எரிந்து வருவதால் யாரும் அருகில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகளவு கரும்புகை எழுவதால் மாதவரம் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த 3 மணி நேரத்திற்கு மேலாக  தீ கொழுந்துவிட்டு எரிகிறது. நேரம் செல்லச் செல்ல தீ மேலும் எரிவதால் வெளியாகும் கரும்புகை அப்பகுதி முழுதும் பரவியுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதற்கிடையே, தீவிபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் தீயணைப்புத்துறை டிஜிபி தனது உயர் அதிகாரிகளுடன் தானே நேரடியாக தீயை அணைத்து மீட்புப்பணியில் ஈடுபட்டார். காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் தினகரன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், மாதவரம் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, தீயணைப்புத் துறை டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது: 

மருந்து தயாரிக்கும் கெமிக்கல் என்பதால் விஷத்தன்மை இல்லை. அக்கம்பக்கத்தில் வசித்து வரும் பொதுமக்கள் பயம் கொள்ளத்தேவை இல்லை. புகை காற்றில் பரவுவதால் ஏற்படும் பிரச்சினை குறித்து தகவல் எதுவுமில்லை. தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் அனைத்து அதிகாரிகளும் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

மூன்று பக்கமும் சூழ்ந்து தீயை அணைத்து வருகிறோம், மொத்தம் 26 தீயணைப்பு வாகனங்கள், 6 நுரை அடிக்கும் வாகனங்கள், மெட்ரோ தண்ணீர் லாரிகள், 500 தீயணைப்பு வீரர்கள் அதிகாரிகள் உள்ளனர், மேலும் 500 தீயணைப்பு வீரர்கள், அதிகாரிகள் வர உள்ளனர். தீ பற்றி எரிந்த இடத்தில் இருந்த அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர். அக்கம்பக்கனர் அகற்றப்பட்டுவிட்டனர் என தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »