Press "Enter" to skip to content

மாதவரம் ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ இன்றிரவுக்குள் அணைக்கப்படும் – சென்னை ஆட்சியர்

மாதவரம் ரசாயன கிடங்கில் ஏற்பட்டுள்ள தீ இன்றிரவுக்குள் முழுமையாக அணைக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார்.

சென்னை:

சென்னை  மாதவரம் ரவுண்டானா அருகே உள்ள ரசாயனக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்தது காணப்படுகிறது. சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

சுமார் 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள், 20க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகள் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீயை ஸ்கை லிப்ட் மூலம் தீயணைப்பு வீரர்கள் அணைத்து வருகின்றனர்.

இந்த தீ விபத்தால் மூலக்கடை ரவுண்டானா – மாதவரம் செல்லும் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்டுள்ள பகுதியில் மின்சாரம் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாதவரம் ரசாயன கிடங்கில் இன்றிரவுக்குள் முழுமையாக தீ அணைக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் சீத்தாலட்சுமி தெரிவித்துள்ளார். கிடங்கின் உரிமையாளர் சுங்க வரி செலுத்தி ரசாயன பொருட்களை கொண்டு வந்துள்ளார் எனவும் அவர் கூறினார்.  

ரசாயன கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.100 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்  அடைந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. தீயை அணைக்கும் பணி 75 % நிறைவடைந்துள்ளதாகவும்  தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »