Press "Enter" to skip to content

மத்திய அரசுக்கு மேலும் ரூ.8,004 கோடியை ஏர்டெல் நிறுவனம் செலுத்தியது

மத்திய அரசுக்கு ஏர்டெல் நிறுவனம் கடந்த 17-ந் தேதி ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்திய நிலையில், தற்போது மேலும் ரூ.8,004 கோடி செலுத்தியுள்ளது.

புதுடெல்லி:

பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள், ரூ.1 லட்சத்து 47 ஆயிரம் கோடி பாக்கித்தொகையை (ஏ.ஜி.ஆர். என்று அழைக்கப்படுகிற உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம் உள்ளிட்டவை) மத்திய அரசுக்கு செலுத்துமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ந் தேதி உத்தரவிட்டது.

ஆனால் இந்த உத்தரவை எந்தவொரு தொலைத்தொடர்பு சேவை நிறுவனமும் ஏற்று மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய பாக்கித்தொகையை செலுத்தவில்லை.

இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 14-ந் தேதி விசாரணைக்கு வந்தபோது, தங்களது உத்தரவை ஏற்று செயல்படுத்தாத தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த தொகையை செலுத்துமாறு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களை வலியுறுத்த வேண்டாம், அவற்றின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வேண்டாம் என்று தொலைத்தொடர்புத்துறையின் டெஸ்க் அதிகாரி உத்தரவிட்டது தெரிய வந்து நீதிபதிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த உத்தரவை உடனே திரும்பப்பெறாவிட்டால், அந்த அதிகாரி சிறைக்கு போக நேரிடும் என நீதிபதிகள் கடுமையாக எச்சரித்தனர்.

இதையடுத்து அந்த உத்தரவை தொலைத்தொடர்புத்துறை உடனடியாக திரும்பப்பெற்றது. அதுமட்டுமின்றி, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் தங்கள் பாக்கித்தொகையை ஒரே நாள் இரவுக்குள் திருப்பி செலுத்துமாறு அதிரடியாக உத்தரவிட்டு நடவடிக்கை எடுத்தது.

இந்த உத்தரவு, அந்த நிறுவனங்களுக்கு பேரிடியாக அமைந்தது.

அதைத் தொடர்ந்து ஏர்டெல், வோடபோன் ஐடியா, டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தவணைகளாக பாக்கித்தொகையை செலுத்த தொடங்கின.

பார்தி ஏர்டெல் நிறுவனம், ரூ.35 ஆயிரத்து 586 கோடி பாக்கி வைத்துள்ளதாக தொலைத்தொடர்புத்துறை கூறுகிறது. இதில் உரிம கட்டணம், அலைக்கற்றை கட்டணம், அபராதம் மீதான வட்டி உள்ளிட்டவை அடங்கும். இந்த நிறுவனம், கடந்த 17-ந் தேதி மத்திய அரசுக்கு ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்தியது. இந்த நிலையில் இந்த நிறுவனம் மத்திய அரசுக்கு மேலும் ரூ.8,004 கோடி செலுத்தி உள்ளதாக நேற்று கூறியது.

இது தொடர்பாக தாக்கல் செய்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாரதி ஏர்டெல் நிறுவனம் கடந்த 17-ந் தேதி ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்திய நிலையில், மேலும் ரூ.3,004 கோடியை செலுத்தி உள்ளது. இதன் மூலம் முழு மற்றும் இறுதித்தொகை செலுத்தியாகி விட்டது. இதன் மூலம் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 24-ந் தேதி பிறப்பித்த உத்தரவை நாங்கள் நிறைவேற்றி விட்டோம்.

அத்துடன் தற்காலிக கட்டணம் வகையில் ரூ.5,000 கோடியை டெபாசிட் செய்துள்ளோம்.

சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏ.ஜி.ஆர்.) உத்தரவின்படி, எங்கள் நிறுவனம் 2006-07 நிதி ஆண்டில் இருந்து 2019 டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை சுயமதிப்பீட்டை செய்தது. மேலும் 2020 பிப்ரவரி 29-ந் தேதி வரையில் வட்டியும் செலுத்தியது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »