Press "Enter" to skip to content

ஆப்கானிஸ்தானில் இருந்து முதல்கட்டமாக 4 ஆயிரம் வீரர்களை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு

தலிபான்களுடன் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து முதல்கட்டமாக ஆப்கானிஸ்தானில் இருந்து 4 ஆயிரத்து 400 வீரர்களை திரும்பப்பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

வாஷிங்டன்:

ஆப்கானிஸ்தானில் 2001-ம் ஆண்டு முதல் உள்நாட்டுப்போர் நடைபெற்று வருகிறது. இந்த சண்டையில் ஈடுபட்டுவரும் தலிபான் பயங்கரவாதிகளை ஒழிக்க உள்நாட்டு படையினருக்கு அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் ஆதரவு அளித்து வருகிறது. 

இந்த நடவடிக்கைகளுக்காக ஆப்கானிஸ்தானில் 13 ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 

இதற்கிடையே உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர ஆப்கானிஸ்தான் அரசின் உதவியோடு தலிபான்களுடன் கடந்த சில மாதங்களாக அமெரிக்கா அமைதி பேச்சுவார்த்தை நடத்தியது. 

இந்த பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியபோது கடந்த வாரம் சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால் ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதல்கள் வெகுவாக குறைந்துள்ளது.

பேச்சுவார்த்தையில் இரு தரப்பிற்கும் உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து கத்தார் நாட்டின் தலைநகர் தோகாவில் அமெரிக்காவுக்கும், தலிபான் பயங்கரவாத அமைப்புக்கும் இடையே  அமைதி ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. இதையடுத்து, 19 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் சண்டை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், தலிபான்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப்படைகள் அடுத்த 14 மாதங்களுக்குள் அந்நாட்டை விட்டு மொத்தமாக திரும்பப்பெறப்பட உள்ளனர்.

இந்நிலையில், ஒப்பந்ததின்படி தங்கள் நாட்டை சேர்ந்த 4 ஆயிரத்து 400 வீரர்களை முதல்கட்டமாக ஆப்கானிஸ்தானில் இருந்து திரும்பப்பெற அமெரிக்கா முடிவு செய்துள்ளது. 

அடுத்த 3 முதல் 4 மாதங்களுக்குள் முதல்கட்ட வீரர்களை திரும்பப்பெறும் நடவடிக்கை நிறைவடையும். இதன் மூலம் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படையினரின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 600 ஆக குறையும். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »