Press "Enter" to skip to content

கேன் குடிதண்ணீர் விலை உயர்ந்தது

கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் போராட்டம் இன்று 5வது நாளாக நீடித்து வரும் நிலையில் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்து கடைகளில் கேன் குடிநீர் ரூ.50 வரை விற்கப்படுகிறது.

சென்னை:

உரிமம் பெறாத 300-க்கும் மேற்பட்ட கேன் குடிநீர் உற்பத்தி ஆலைக்கு சீல் வைத்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் மட்டுமின்றி கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்பட பல மாவட்டங்களில் ராட்சத மோட்டார் வைத்து நிலத்தடி நீரை உறிஞ்சி கேன் குடிநீர் விற்பனை செய்கின்றனர். இதனால் நிலத்தடி நீர் மட்டம் 300 முதல் 500-அடிக்கும் கீழே சென்று விட்டது.

நிலத்தடி நீர் சுரண்டப்படுவதை தடுக்க தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. சட்டவிரோதமாக அனுமதி இன்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து அனுமதியின்றி செயல்படும் குடிநீர் ஆலைகளை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் சீல் வைத்து வருகின்றனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் 470 கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் உள்பட தமிழகம் முழுவதும் 1689 குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் 568 குடிநீர் உற்பத்தி நிறுவனம் மட்டுமே அனுமதி பெற்று செயல்படுகிறது. சட்டவிரோதமாக செயல்பட்ட 300-க்கும் மேற்பட்ட ஆலைகளில் சோதனை நடத்தி சீல் வைத்தனர்.

இதற்கிடையில் நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமத்தை எளிய முறையில் பெறுவதற்கான வழிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வலியுறுத்தி கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் கடந்த 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இன்று 5-வது நாளாக நீடிக்கிறது. விடுதிகள், ஓட்டல்கள், நிறுவனங்கள், அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் கேன் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.

போராட்டம் காரணமாக கேன் குடிநீர் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்தது. கடைகளில் கேன் குடிநீர் ரூ.50 வரை விற்கப்படுகிறது.

இதுகுறித்து குடிநீர் கேன் விற்பனையாளர் ஒருவர் கூறும்போது, சென்னையில் இன்னும் குடிநீர் கேன் தட்டுப்பாடு வரவில்லை. மேடவாக்கம், பொன்மார் பகுதியில் உள்ள குடிநீர் உற்பத்தி ஆலைகள் நேற்று திறக்கப்பட்டன. முறையான லைசென்சு உள்ளதால் போராட்டத்தில் இருந்து விலகி ஆலைகளை திறந்ததால் தண்ணீர் தட்டுப்பாடு வரவில்லை, விலையும் உயர்த்தவில்லை.

20 லிட்டர் கேன் ரூ.35, ரூ.40 என்ற விலையில் விற்கப்படுகின்றன.

ஆனால் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டு வருகின்ற ஆலைகள் தொடர்ந்து மூடப்பட்டால் கேன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் என்றார்.

சென்னையில் ஒரு சில பகுதிகளில் கேன் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தாலும் பெரும்பாலான பகுதிகளில் தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்தது. தங்குதடையின்றி குடிநீர் கிடைக்க குடிநீர் வாரியம் மூலம் மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related Tags :

 குடிநீர் கேன் பற்றிய செய்திகள் இதுவரை…

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »