Press "Enter" to skip to content

சாலையோரம் நின்றவர்கள் மீது பார வண்டி கவிழ்ந்ததில் 5 பேர் பலி

சாலையோரம் நின்றவர்கள் மீது லாரி கவிழ்ந்தது. இதில் லாரிக்கு அடியில் சிக்கிய 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

புனே:

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் தாலேகாவ் தாபடே பகுதியை சேர்ந்த 6 பேர் 3 மோட்டார் சைக்கிள்களில் ராய்காட் மாவட்டம் அலிபாக் பகுதிக்கு சென்றிருந்தனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் வீடு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

இரவு 11 மணி அளவில் கோபோலி பகுதியில் உள்ள ‘அண்டா பாயிண்ட்’ என்ற வளைவில் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சாலையோரம் நின்றனர். அவர்களில் ஒருவர் இயற்கை உபாதை கழிப்பதற்காக புதருக்குள் இறங்கி சென்றார். இந்த நேரத்தில் மாவு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. அவர்கள் நின்றுகொண்டிருந்த அந்த வளைவில் திரும்பும்போது, திடீரென லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.

எதிர்பாராதவிதமாக நடந்த இந்த பயங்கர விபத்தில் சாலையோரம் நின்றவர்கள் 5 பேரும் லாரியின் அடியில் சிக்கிக்கொண்டனர். லாரி மற்றும் மாவு மூட்டைகள் அமுக்கியதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். இயற்கை உபாதை கழிக்க சென்றதால் உடன் வந்த ஒருவர் உயிர்தப்பினார். விபத்துக்குள்ளான லாரியை ஓட்டிவந்த டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த கோபோலி போலீசார் கிரேன் மூலம் லாரியை தூக்கி பலியான 5 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »