Press "Enter" to skip to content

டெல்லி வன்முறை : ‘மத்திய அரசு ஆதரவுடன் நடந்த இனப்படுகொலை’ – மம்தா பானர்ஜி காட்டம்

டெல்லியில் சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவம் மத்திய அரசு ஆதரவுடன் நடந்த இனப்படுகொலை என திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

கொல்கத்தா:

டெல்லியில் சமீபத்தில் நடந்த வன்முறை சம்பவங்களில் 40-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மத்திய, மாநில அரசுகளை வன்மையாக கண்டித்து இருந்தன. அந்தவகையில் மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும் நேற்று மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

கொல்கத்தாவில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசும்போது கூறுகையில், ‘டெல்லியில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டது எனக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. இது ஒரு இனப்படுகொலை என்றே நினைக்கிறேன். இந்த வன்முறை சம்பவங்கள் மத்திய அரசு ஆதரவில் நடந்தன’ என்று குற்றம் சாட்டினார்.

குடியுரிமை திருத்த சட்டம் காரணமாக டெல்லி வன்முறையில் ஏராளமான மக்கள் உயிரிழந்திருப்பதாக கூறிய மம்தா பானர்ஜி, உள்துறை மந்திரி அமித்ஷா இதை மனதில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேற்கு வங்காளம் உள்பட நாடு முழுவதும் குஜராத் மாதிரி கலவரங்களை ஏற்படுத்த பா.ஜனதா முயற்சிப்பதாக தெரிவித்த அவர், டெல்லி வன்முறை சம்பவங்களுக்காக பா.ஜனதா மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »