Press "Enter" to skip to content

அ.தி.மு.க. வாக்கு வங்கியில் கை வைக்க முடியாது: அமைச்சர் ஜெயக்குமார்

தற்போது நல்ல ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. யார் கட்சி ஆரம்பித்தாலும் அ.தி.மு.க. வாக்கு வங்கியில் கை வைக்க முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

சென்னை :

அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி இருவரும் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி சென்றனர். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் ஜெயக்குமார், நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லிக்கு அரசு முறை பயணமாக செல்கிறோம். விருதுநகரில் நடந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அ.தி.மு.க. அரசு இஸ்லாமிய மக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். சிறுபான்மை மக்களுக்கு இதய துடிப்பாக அ.தி.மு.க. அரசும், கட்சியும் உள்ளது. இதனால் இஸ்லாமியர்கள் அச்சம் கொள்ள தேவை இல்லை.

வண்ணாரப்பேட்டையில் போராட்டம் நடத்துபவர்கள் முதல்-அமைச்சரை 3 முறை சந்தித்து பேசி உள்ளனர். சட்டமன்றத்தில் தெளிவாக பேசி உள்ளார். நானும் நேரில் பேசி உள்ளேன். இதில் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பதை இஸ்லாமிய மக்கள் புரிந்து போராட்டத்தை கைவிட்டு இயல்பு நிலைக்கு திரும்பவேண்டும்.

நடிகர்கள் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் இருவரும் இணைவதால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ரஜினிகாந்த் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை. யார் கட்சி ஆரம்பித்தாலும் எங்களுடைய வாக்கு வங்கியில் கை வைக்க முடியாது.

தற்போது நல்ல ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. அதற்கு அங்கீகாரம் தரும் வகையில் 2021-ல் நடக்கும் சட்டசபை தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பை எங்களுக்கு வழங்குவார்கள்.

சசிகலா விவகாரத்தில் தற்போது அ.தி.மு.க.வில் என்ன நிலையோ, அதே நிலைதான் நீடிக்கும். இஸ்லாமிய மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் மக்கள் கணக்கெடுப்பில் சில ‌‌ஷரத்துகள் குறித்து மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்பட்டு உள்ளது. அதற்கு மத்திய அரசு பதில் அளிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »