Press "Enter" to skip to content

பசுவின் சிறுநீரும், சாணமும் கொரோனா வைரசை குணப்படுத்தும்-பாஜக எம்எல்ஏ கருத்தால் சர்ச்சை

பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தால் கொரோனா வைரசை குணப்படுத்த முடியும் என அசாம் மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. சுமன் ஹரிபிரியா கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

கவுகாத்தி:

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி 3 ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகளை ஏற்படுத்தி இருக்கும் கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகளோ, குணப்படுத்தும் மருந்துகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆனால் இந்த வைரசை பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தின் மூலம் குணப்படுத்தலாம் என அசாம் மாநில பா.ஜனதா எம்.எல்.ஏ. சுமன் ஹரிபிரியா கூறியுள்ளார். அங்கு நேற்று தொடங்கிய சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில், வங்காளதேசத்துக்கு கால்நடைகள் கடத்தும் விவகாரம் குறித்து அவர் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘பசு சாணம் மிகுந்த பயனுள்ளது என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதைப்போல பசுவின் சிறுநீர் தெளித்தால், அந்த பகுதியே சுத்தமாகிறது. அதே முறையில் பசுவின் சாணமும், சிறுநீரையும் கொண்டு கொரோனா வைரசையும் குணப்படுத்த முடியும் என நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘மாட்டிறைச்சி ஏற்றுமதியில் உலக அளவில் 2-ம் இடத்தில் வங்காளதேசம் இருக்கிறது. அந்த பசுக்கள் அனைத்தும் நமது பசுக்கள். இங்கிருந்து பசுக்களை கடத்தும் நடவடிக்கையில் முந்தைய காங்கிரஸ் அரசு எதுவும் செய்யவில்லை’ என்றும் குறிப்பிட்டார்.

கொரோனா வைரசை ஒழிக்க வழி தெரியாமல் உலக நாடுகள் கையை பிசைந்து கொண்டிருக்க, பசுவின் சிறுநீர் மற்றும் சாணத்தால் இந்த வைரசை குணப்படுத்த முடியும் என அசாம் எம்.எல்.ஏ. கூறியிருப்பது மாநிலத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »