Press "Enter" to skip to content

மருத்துவ தேர்வில் முறைகேட்டை தடுக்க ‘மென்பொருள்’ அறிமுகம்

மருத்துவ தேர்வில் முறைகேட்டை தடுக்க மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் சுதா சே‌‌ஷய்யன் தெரிவித்தார்.

சென்னை:

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சே‌‌ஷய்யன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் 32-வது பட்டமளிப்பு விழா வருகிற 5-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 11 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வெள்ளி விழா கூட்டரங்கில் நடைபெறுகிறது.

விழாவுக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தரும், தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக ‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கி.கஸ்தூரிரங்கன், பாபா அணு ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆர்.சிதம்பரம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் அது சார்ந்த துணை படிப்புகள் படித்த 17 ஆயிரத்து 590 பேர் பட்டம் பெற உள்ளனர். இதில் 23 சதவீதம் ஆண்களும், 77 சதவீதம் பெண்களும் ஆவார்கள்.

மருத்துவ மாணவர்கள் சேர்க்கையை தேர்வுக் குழுதான் மேற்கொள்கிறது. ‘நீட்’ தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் கல்லூரிகளில் சேரும்போது அவர்களுக்கு பதிவு எண் நாங்கள் வழங்குவோம். அப்போது அவர்களுடைய ஆவணங்களை சரி பார்ப்போம். தற்போது ‘நீட்’ தேர்வு முறைகேடு ஆள் மாறாட்டத்தின் மூலம் நடைபெற்றுள்ளது. ஆவணங்கள் மூலம் அல்ல. எனவே நீட் தேர்வு முறைகேடு தொடர்பான விவகாரத்தில் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு எந்தவித தொடர்பும் இல்லை.

மருத்துவபடிப்பு தேர்வு மையங்களில் 16 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராவில் பதிவாகும் காட்சிகள் கம்ப்யூட்டர் மூலம் கண்காணிக்கப்படுகிறது. தற்போது மருத்துவபடிப்பு தேர்வுகளில் முறைகேட்டை முற்றிலும் தடுப்பதற்காக சென்னை வர்த்தக சபை உதவியுடன் ‘சாப்ட்வேர்’ (செயற்கை நுண்ணறிவு மென்பொருள்) உருவாக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்களில் பேப்பரை மாற்றுதல், அருகில் உள்ளவரிடம் பேசுதல் போன்றவை நடைபெற்றால் மென்பொருள் காட்டிக் கொடுத்துவிடும். இந்த மென்பொருளை வருகிற மே மாதம் நடைபெற உள்ள எம்.எஸ்., எம்.டி. தேர்வுகளில் பரீட்சார்த்த முறையில் பயன்படுத்த உள்ளோம்.

ஆகஸ்டு மாதம் நடைபெறும் மருத்துவ இளங்கலை தேர்வில் இந்த மென்பொருள் முழுமையாக பயன்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »