Press "Enter" to skip to content

புதுவையில் மக்களோடு கியூவில் நின்று கவர்னரை சந்தித்த அமைச்சர்

சந்திக்க நேரம் ஒதுக்கி தர மறுத்ததால் பொதுமக்களோடு வரிசையில் நின்று கவர்னரை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ் சந்தித்தார்.

புதுச்சேரி:

புதுவை மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ்.

புதுவை மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

இவர் ஏனாம் பிராந்தியத்தின் வளர்ச்சி திட்டங்களை கவர்னர் கிரண்பேடி தடுப்பதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.

ஏனாம் பிராந்தியத்தின் வளர்ச்சி திட்டங்கள் குறித்தும், பல்வேறு துறைகளில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் பேச கவர்னர் கிரண்பேடியிடம் நேரம் ஒதுக்கி தருமாறு கடந்த 25-ந்தேதி கடிதம் எழுதி கேட்டார்.

ஆனால், கவர்னர் கிரண்பேடி ஏனாம் பிரச்சனைகள் தொடர்பாக மார்ச் 16-ந் தேதி அரசு செயலாளர்களுடன் பேசிவிட்டு அதன் பிறகு நேரம் ஒதுக்கி தருவதாக பதில் அளித்தார்.

இதனையடுத்து அமைச்சர் மல்லாடிகிருஷ்ணாராவ், கவர்னர் பொதுமக்களை சந்திக்கும் நேரத்தில் நானும் வரிசையில் நின்று திங்கட்கிழமை கிரண்பேடியை சந்திக்க இருப்பதாக கூறினார்.

இதன்படி நேற்று மாலை கவர்னர் பொதுமக்களை சந்திக்கும் நேரத்தில் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கவர்னர் மாளிகைக்கு சென்றார். அங்கு பொதுமக்களோடு வரிசையில் நின்று கவர்னர் கிரண்பேடியை சந்தித்தார். சுமார் 30 நிமிடம் இந்த சந்திப்பு நீடித்தது.

சந்திப்புக்கு பிறகு அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

சுற்றுலாத்துறை உள்ளிட்ட 11 கோப்புகளுக்கு கவர்னர் ஒப்புதல் தரவில்லை. அமைச்சர் என்ற முறையில் அவரை சந்திக்க நேரம் ஒதுக்கி கேட்டால் மறுக்கிறார். எனவே, நான் மக்களோடு மக்களாக சென்று அவரை சந்தித்து பேசினேன்.

அப்போது கோப்புகளுக்கு அனுமதி தராதது, தேக்கி வைத்திருப்பது தொடர்பாக அவரிடம் கேட்டேன். அவர் ஒரு வார்த்தைகூட பதில் தரவில்லை. தனிப்பட்ட முறையில் பழிவாங்கும் நோக்கில் அவர் செயல்பட்டு வருகிறார். அடுத்த கட்டமாக டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சகத்தில் புகார் தெரிவிப்பேன். மத்திய உள்துறை மந்திரியை சந்திக்க நேரம் கேட்பேன்.

இவ்வாறு மல்லாடி கிருஷ்ணாராவ் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »