Press "Enter" to skip to content

6-வது நாளாக போராட்டம்- கேன் குடிதண்ணீர் தட்டுப்பாடு அதிகரிப்பு

கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்கள் 6-வது நாளாக தொடர்ந்த வேலை நிறுத்த போராட்டத்தால், பல்வேறு இடங்களில் கேன் குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிப்பட்டனர்.

சென்னை:

நிலத்தடிநீர் எடுக்க முறையான உரிமம் பெறாத குடிநீர் ஆலைகளை மூடி ‘சீல்’ வைக்க வேன்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மாவட்ட கலெக்டர்கள் ஆய்வு செய்து அனுமதி பெறாத ஆலைகளை மூடி வருகின்றனர். இது வரையில் 420 குடிநீர் கேன் உற்பத்தி ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் கடந்த 27-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால் குடிநீர் கேன் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அனுமதியின்றி செயல்பட்ட குடிநீர் கேன் ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டதால் சென்னையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள், நடுத்தர மக்கள் பெரும்பாலானவர்கள் கேன் தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். ஓட்டல்கள், வணிக நிறுவனங்களும் கேன் தண்ணீரை நம்பி உள்ளன. கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் இன்று 6-வது நாளாக நீடித்து வருவதால் கேன் தண்ணீருக்கு தேவை அதிகரித்துள்ளது.

முறையான உரிமம் பெற்று செயல்படக்கூடிய குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் இருந்து விலகி உற்பத்தியை தொடங்கினர். இதனால் இன்னும் மிகப்பெரிய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

சென்னையில் விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள், புறநகர் பகுதிகளில் குடிநீர் கேன் தேவை அதிகரித்துள்ளது. போதுமான அளவு கேன் சப்ளை இல்லாததால் விலை உயர்ந்தது. பிரபல கம்பெனிகளின் விலை ரூ.80 வரை விற்கப்படுகிறது. ரூ.30-க்கு விற்கப்பட்ட கேன்களின் விலை ரூ.40, ரூ.50 என உயர்ந்துள்ளது.

மேடவாக்கம், பொன்மார் பகுதியில் நிறைய கேன் குடிநீர் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த பகுதியில் இதுவரையில் உற்பத்தி நிறுத்தப்படவில்லை. அனுமதி பெற்றதும், அனுமதி இல்லாத ஆலைகளும் தொடர்ந்து செயல்படுவதால் ஆதம்பாக்கம், மேடவாக்கம், வேளச்சேரி, தாம்பரம், மடிப்பாக்கம், சேலையூர் உள்ளிட்ட பகுதிகளில் கேன் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படவில்லை.

வேலைநிறுத்தம் தொடர்ந்து நீடித்தால் கேன் தண்ணீர் தட்டுப்பாடு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சமையல் மற்றும் குடிப்பதற்கு கேன் தண்ணீர் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஏற்பட்டு வரும் பிரச்சினையால் ஒரு சிலர் வீட்டிலேயே குடிநீர் சுத்திகரிப்பு வசதியை ஏற்படுத்தி வருகின்றனர்.

Related Tags :

 குடிநீர் கேன் பற்றிய செய்திகள் இதுவரை…

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »