Press "Enter" to skip to content

ஊரடங்கு உத்தரவை வெற்றி பெற செய்யுங்கள் – ராமதாஸ் வேண்டுகோள்

கொரோனாவை தடுக்க பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவை வெற்றிபெற செய்யவேண்டும் என்று பொதுமக்களுக்கு டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தங்களுக்கு தாங்களே ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துக் கொண்டு, அதை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

கொரோனா பரவலை தடுக்க தனித்திருப்பதும், விழிப்புடன் இருப்பதும் தான் சிறந்த தீர்வு எனும் நிலையில், 14 மணி நேரம் மக்கள் ஒருவரை ஒருவர் நெருங்காமல் தவிர்க்கும் வகையிலான இந்த நடவடிக்கை பயனளிக்கக் கூடியதாகும்.

கொரோனா வைரஸ் தாக்குதலை 3-வது உலகப்போராக கருதி, அதன் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க மக்கள் அனைவரும் தத்தமது பங்களிப்பை வழங்கி மனித குலத்தை காக்க வேண்டும். நாளை பகல் முழுவதும் அடையாள ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியிருப்பதன் மூலம், முழு அடைப்புடன் கூடிய ஊரடங்கு தான் கொரோனாவை தடுக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் சமூக அளவில் பரவத் தொடங்கி விட்டால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாது என்பதால், பிரதமர் அறிவுறுத்தியவாறு, நாளை இந்திய மக்கள் அனைவரும், குறிப்பாக தமிழக மக்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதை ஒரு நாளுக்கான செயல்பாட்டாக கருதாமல், அடுத்த ஒரு மாதத்திற்கு வாய்ப்புள்ள அனைத்து நாட்களிலும் கூடுமானவரை ஊரடங்கை கடைபிடிக்க மக்கள் முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேசிய முற்போக்கு திராவிட கழகத் தலைவர் விஜயகாந்த், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், பெரம்பலூர் தொகுதி எம்.பி. பாரிவேந்தர் ஆகியோரும் ஊரடங்கு உத்தரவை மக்கள் வெற்றிபெற செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »