Press "Enter" to skip to content

சொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் விடிய விடிய காத்திருந்த வெளிமாநில தொழிலாளர்கள்

ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விடிய விடிய காத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால் அனைத்து நாடுகளும் 

கொரோனா வைரசை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 

தற்போதைய நிலவரப்படி, இந்தியாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனாவால் 20 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். உலகளவில் பாதிப்பு 6.5 லட்சத்தையும், பலி எண்ணிக்கை 30 ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் கடந்த 24-ம் தேதி நள்ளிரவு முதல் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகள் மட்டுமே கிடைக்கும் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஊரடங்கு உத்தரவால், வெளிமாநிலங்களில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் பலர் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், சொந்த ஊர் திரும்ப டெல்லி பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விடிய விடிய காத்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தலைநகர் டெல்லியில் உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஊர் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர். வேலை இல்லாத காரணத்தால், அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்கள் நடந்தே செல்லும் செய்திகள் கடந்த சில நாட்களாக வெளிவந்தன. 

இதையடுத்து, டெல்லியில் ஆனந்த் விஹார் பேருந்து நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் விடிய விடிய காத்திருந்தனர். முகக்கவசம் மற்றும் கைக்குட்டைகளை முகத்தில் கட்டிக்கொண்டு சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் கூடியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அங்கு போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுக் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். 

சொந்த ஊர் திரும்பும் தொழிலாளர்களை அழைத்து வர 1000 பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளதாக உத்தரப்பிரதேச அரசும், 200 பேருந்துகள் இயக்கப்படும் என்று டெல்லி அரசும் அறிவித்திருந்தது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »