Press "Enter" to skip to content

400 கோடி மக்களை வீட்டிற்குள் முடக்கிய சமூக பரவல் நோயான கொடிய கொரோனா

ஊரடங்கு மற்றும் தனிமைப்படுத்துதல் மூலம் உலக மக்கள் தொகையில் பாதிக்கு மேற்பட்டோரை வீட்டிற்குள் முடக்கி வைத்துள்ளது கொடூர கொரோனா வைரஸ் தொற்று.

கொரோனா வைரஸ் தொற்று… தற்போது உலகையே அச்சுறும் ஒரு சொல் இதுதான். சீனாவில் கடந்த டிசம்பர் மாதம் இந்த கொடூர வைரஸ் கண்டறியப்பட்டது, முதலில் சீனாக்கூட இதை மிகப்பெரிய அளவில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் நாட்கள் செல்ல செல்ல அதன் வீரியத்தை அறிந்து கொண்டது.

சமூக பரவல் தொற்று நோயான இதை கட்டுப்படுத்த ஒரே வழி மக்களை தனிமைப்படுத்துவதுதான் என சீனா தீர்மானித்தது. இதனால் வுகான் மாகாணத்தில் ஒரு கிராமத்தில் தொற்று இருந்தால்கூட வுகான் மாகாணத்தையே தனிமைப்படுத்தியது.

ஆனால் சீனாவின் நடவடிக்கையை மேற்கத்திய நாடுகள் ஏளனமாக பார்த்தன. அதேவேளையில் சீனா மக்களை வெளியே வரவிடாமல் உத்தரவுகளை பிறப்பித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தது. இதன்மூலம் சீனாவில் கொரோனாவின் தொற்று கட்டுப்படுத்தப்பட்டது.

அதன்பின் ஈரான், இத்தாலியில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. தற்போது உலகம் முழுவதும் பரவி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு சமூக பரவல் நோய் என்பதை தற்போது அனைத்து நாடுகளும் புரிந்து கொண்டன. இதனால் நாட்டின் எல்லைகளை மூடி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளன. ஆஸ்திரேலியா ஆறு மாதத்திற்கு எல்லைகளை மூடியுள்ளது. இன்று சிங்கப்பூர் ஒரு மாத ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. 7-ந்தேதியில் இருந்து அமலுக்கு வருகிறது.

இந்தியாவில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊடரங்கு உத்தரவு, தனிமைப்படுத்துதல் மூலமாக உலக மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் வீட்டில் முடங்கிக் கிடப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.

உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 7.8 பில்லியன் (780 கோடி) எனக் கருதப்படுகிறது. நேற்று தாய்லாந்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுவரை உலகமெங்கும் 3.9 பில்லியன் மக்கள் வீட்டிற்குள் முடங்கி கிடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஏறக்குறைய உலக மக்கள் தொகையில் பாதியாகும்.

சிங்கப்பூரில் 7-ம் தேதியில் இருந்து ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. அப்போது எண்ணிக்கை பாதிக்கு மேலாக அதிகரித்து விடும். 49 நாடுகளில் 2.78 பில்லியன் வீடுகள் இந்த கணக்கில் வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் நாடுகளில் ஊரடங்கு இருந்து வருகிறது. ஆசியாவில் இந்தியா, நேபாளம், இலங்கை நாடுகள் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

அமெரிக்காவில் பெரும்பாலான இடங்கள் முடக்கப்பட்டுள்ளன. ஆனால் நியூசிலாந்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. ஆப்பிரிக்க நாடுகளில் தென்ஆப்பிரிக்கா மற்றும் மொராக்கோவில் ஊரடங்கு உள்ளது. எரித்திரியாவில் நேற்றில் இருந்து 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் 10 நாடுகளில் 60 கோடி மக்களை வீட்டிற்குள்ளேயே இருங்கள் என அரசு வலியுறுத்தியுள்ளன. ஜெர்மனி, கனடா, மெக்சிகோ, கனடா போன்ற நாடுகள் இதில் அடங்கும்.

மற்ற 26 நாடுகள் அல்லது பிராந்தியத்தில் 50 கோடி மக்கள் மாலை மற்றும் இரவு நேரங்களில் ஊரடங்கு காரணமாக வீட்டிற்குள் உள்ளனர். கென்யா, எகிப்து, மாலி, சிலி, பனாமா போன்ற நாடுகளில் இந்த நடவடிக்கை கடைபிடிக்கப்படுகின்றன.

ஏழு நாடுகளில் முக்கிய நகரங்கள் மட்டும் முடக்கப்பட்டுள்ளன. பின்லாந்து, சவுதி அரேபியால் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »