Press "Enter" to skip to content

பிளாஸ்மா சிகிச்சை சோதனை முயற்சிக்கு அனுமதி – மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சையை சோதனை முயற்சியில் மேற்கொள்ள ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி:

இந்தியா முழுவதும் 56 ஆயிரத்து 342 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

கொரோனா பரவியவர்களில் 37 ஆயிரத்து 916 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 16 ஆயிரத்து 540 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்த கொடிய வைரசுக்கு நாடு முழுவதும் இதுவரை ஆயிரத்து 886 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்க அனுமதி தரவேண்டும் என தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தன.  

பிளாஸ்மா சிகிச்சை என்பது கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் இருந்து பெறப்படும் எதிர்ப்பு அணுக்களை கொண்டு மேற்கொள்ளப்படும் சிகிச்சை முறையாகும். 

கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமடைந்தவரின் ரத்தத்தில் உள்ள எதிர்ப்பு அணுக்களை எடுத்து பாதிக்கப்ப்ட்ட நபர்களில் உடலில் செலுத்தி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சிகிச்சை ஆகும். இந்த சிகிச்சை முறையில் நல்ல பலன் கிடைப்பதாக டெல்லி, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் தெரிவித்திருந்தன. 

இதையடுத்து தமிழகத்திலும் இந்த பிளாஸ்மா சிகிச்சை முறைக்கு அனுமதிக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக இந்த சிகிச்சை முறைக்கு அனுமதி அளிக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில் டெல்லியில் இன்று கொரோனா குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறையின் இணைச்செயளாலர் லவ் அகர்வால், 

கொரோனா பாதிக்கப்பட்ட நபருக்கு பரிசோதனை முயற்சியில் பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். 

மேலும், இந்த சோதனை முயற்சிக்கு நாடு முழுவதும் முதலில் 21 மருத்துவமனைகளில் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த பிளாஸ்மா சிகிச்சை பரிசோதனை முயற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைக்களில் தமிழகத்தில் அமைந்துள்ள மருத்துவமனைகளும் உள்ளடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.      

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »