Press "Enter" to skip to content

பொருளாதார மேம்பாட்டிற்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் ஒதுக்கீடு – பிரதமர் மோடி

கொரோனா மீட்பு நடவடிக்கை மற்றும் பொருளாதாரத்தை உயர்த்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் ஒதுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி:

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்படுள்ளது. இந்நிலையில், அமலில் உள்ள ஊரடங்கு மே 17-ம் தேதி நிறைவுக்கு வரும் நிலையில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். 

அந்த உரையில் அவர் கூறியதாவது:-

கொரோனாவுடன் போராடி உயிரிழப்புகளை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் முன்னேறவும் வேண்டும். வலிமையான இந்தியாவை உருவாக்க இதுவே தருணம். நாம் அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 

இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை உலக நாடுகள் கொள்முதல் செய்து வருகின்றன. மூலப்பொருள் மற்றும் உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவில் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி உலகின் வளர்ச்சிக்கு வித்திடும். 

கொரோனா பாதிப்பு தொடங்கிய போது பிபிஇ எனப்படும் பாதுகாப்பு உபகரணம் ஒன்று கூட நம் நாட்டில் உற்பத்தி செய்யவில்லை. 

என் 35 முகக்கவசம் மட்டுமே குறைவான எண்ணிக்கையில் நம்மிடம் இருப்பு இருந்தது. ஆனால் தற்போது தினமும் 2 லட்சம் பிபிஇ பாதுகாப்பு உபகரணங்களையும், 2 லட்சம் என் 35 ரக முகக்கவசங்களையும் நாம் தயாரிக்கிறோம்.   

இந்தியாவின் வளர்ச்சி பொருளாதாரம், உள்கட்டமைப்பு, மனித வளம், உற்பத்தி தேவை மற்றும் தொழில்நுட்பம் ஆகிய 5 காரணிகளை கொண்டதாகும். 

கொரோனா மீட்பு நடவடிக்கைகளுக்காகவும், நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் 20 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சிறப்பு பொருளாதார திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த பொருளாதார சிறப்புத்திட்டங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவிகிதம் ஆகும்.

இந்த சிறப்பு திட்டம் மூலம் ஏழை, எளிய நடுத்தர மக்கள் பயன் அடைவார்கள். உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் விற்பனை, உள்ளூர் விநியோகம் இவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம். 

சிறு,குறு நிறுவனங்களுக்கு இந்த திட்டம் உதவும். 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்கும். 

இந்த சிறப்பு பொருளாதார வளர்ச்சி திட்டம் குறித்த விரிவான விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் அறிவிப்பார். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »