Press "Enter" to skip to content

ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் – மத்திய அரசுக்கு, முக ஸ்டாலின் வலியுறுத்தல்

வேலையிழப்பும், வருமான இழப்பும் தாண்டவமாடுகிறது என்றும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா நோய்த் தொற்றினால் கடந்த மூன்று மாதங்களாக வாழ்வாதாரத்தை அடியோடு தொலைத்துவிட்டுத் துயரத்தில் மூழ்கியிருக்கும் ஏழை-எளிய மக்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தரப் பிரிவு மக்கள் ஆகியோருக்கு, நெருக்கடி மிகுந்த இந்தக் காலக்கட்டத்தில் கூட மனிதநேயத்துடன் உதவி செய்ய மத்திய பா.ஜ.க. அரசு மனமிரங்கவில்லை என்பது உள்ளபடியே மிகுந்த வேதனையளிக்கிறது.

மாநிலங்கள் வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கிச் சீரழிந்து கிடக்கின்றன. ஒவ்வொரு மாநிலமும் ஒரு லட்சம் கோடி வரை நிவாரணம் வேண்டும் என்று கோரியுள்ள நிலையில் மாநில நிதி ஆதாரத்தை வலுப்படுத்த ஏற்ற நிதி ஒதுக்கீடு இல்லை என்பதால் கூட்டாட்சித் தத்துவத்தின் கடமையையும் பொறுப்பையும் மத்திய அரசு நிறைவேற்ற இப்போதும் கூட எண்ணிப்பார்க்கவில்லை. 6.30 கோடிக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் இருந்தும், 45 லட்சம் நிறுவனங்களுக்காக, சில நிவாரணங்களை மட்டும் அறிவித்து மற்ற சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை அம்போவென்று கை கழுவியிருப்பது கவலை அளிக்கிறது.

கொரோனா பேரிடரால் ஒவ்வொரு துறையும் கடுமையான தாக்கத்திற்குள்ளாகி தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டுள்ள இந்த மோசமான தருணத்தில், அந்தத் துறைகளைத் தூக்கி நிறுத்துவதற்கான எந்த முயற்சிகளையும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மேற்கொள்ளவில்லை. தொழிலாளர்களும், விவசாயிகளும் இந்த நாட்டின் முதுகெலும்பு என்ற அடிப்படையை மறந்துவிட்டு, மத்திய அரசு செயல்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரின் துயரங்களையும் துடைத்து சிறுதொழில் முதல் அனைத்துத் துறைகளிலும் ஒருங்கிணைந்த முன்னேற்றத்திற்கான அர்த்தமுள்ளதொரு நிவாரணத் திட்டத்தை ஏனோ பிரதமரும் அறிவிக்க முன்வரவில்லை; நிதி மந்திரியும் தன் செயல்திட்டத்தில் கூறிடவில்லை.

கொரோனா பேரிடரினால் இழந்த வாழ்வாதாரம், வருமானம், தொழில் முன்னேற்றம், மாநிலங்களின் நிதி நிலைமை உள்பட இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கத் தேவையான அணுகுமுறை, மத்திய பா.ஜ.க. அரசிடம் இல்லாமல் வெறுங்கையால் முழம் போடும் வேலையில் ஈடுபடுகிறார்களோ என்ற சந்தேகம் அனைவரிடமும் வலுப்பட்டுள்ளது.

இது பேரிடர் நேரம்; பேரிடரிலிருந்து பொருளாதாரத்தை மீட்க வேண்டிய காலம். வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்வேன்; 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேன் என்ற நிறைவேறாத தேர்தல் வாக்குறுதிகள் போல், கொரோனா பேரிடரிலிருந்து இந்தியப் பொருளாதாரத்தை மீட்டுருவாக்கம் செய்ய ஆக்கபூர்வமான செயல்திட்டம் எங்கே எங்கே என்று தேடிப் பார்க்கும் நிலைதான் இப்போதும் நீடிக்கிறது.

வேலையிழப்பும், வருமான இழப்பும் ஒவ்வொரு குடும்பத்திலும் தாண்டவமாடும் இந்த நேரத்தில் மனிதநேயத்திற்கும் மனிதாபிமானத்திற்கும் மதிப்பளித்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5,000 ரூபாய் நேரடியாக பணமாக வழங்கிடும் திட்டத்தை முதலில் அறிவித்து, ஆறுதல் தர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »