Press "Enter" to skip to content

ஓராண்டுக்கு 30 சதவீத ஊதியத்தை விட்டுக் கொடுக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முடிவு

கொரோனா பாதிப்புகளுக்காக ஓராண்டுக்கு தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை விட்டுக் கொடுக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார்.

புதுடெல்லி:

கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்களிடம் இருந்து பிரதமர் மோடி நிதியுதவி கோரினார்.  

இதையடுத்து, முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், பிரபல நிறுவனங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் பிரதமர் நிவாரண நிதிக்கு நிதி வழங்கி வருகின்றனர். 

இந்நிலையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு கூடுதல் நிதி கிடைக்கும் வகையில் பல சிக்கன நடவடிக்கைகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் எடுத்துள்ளார். 

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தனது ஊதியத்தில் 30 சதவீதத்தை ஒரு ஆண்டுக்கு விட்டுக் கொடுக்க ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார். ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு சொகுசு கார் வாங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் விருந்து நிகழ்ச்சிகள் குறைக்கப்படும். நிகழ்ச்சிகளில் குறைந்தளவு விருந்தினர்கள் அழைக்கப்படுவர். அதன்மூலம் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, பூக்கள், அலங்காரம், உணவு ஆகியவற்றின் தேவை குறைக்கப்படும்.

செலவைக் குறைக்கும் வகையில் உள்நாட்டுப் பயணத்தை குறைத்துக் கொள்ளவும், தொழில்நுட்ப உதவியுடன் மக்களைச் சந்திக்கவும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நிவாரண நிதிக்கு தனது மார்ச் மாத ஊதியத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்கனவே வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »