Press "Enter" to skip to content

கொரோனா நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) இரட்டிப்பு அடையும் வேகம் குறைந்தது- மத்திய மந்திரி தகவல்

கொரோனா வைரஸ் இரட்டிப்பு ஆகும் வேகம் குறைந்துள்ளதாக மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் கூறினார்.

புதுடெல்லி:

மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரட்டிப்பு ஆகும் கால அளவு, முன்பு 11.5 நாட்களாக இருந்தது. கடந்த 3 நாட்களாக, இந்த காலஅளவு 13.6 நாட்களாக வேகம் குறைந்துள்ளது. அதுபோல், இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் 3.1 ஆக குறைந்துள்ளது. அதே சமயத்தில், குணமடைபவர்கள் விகிதம் 37.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.

3.1 சதவீத நோயாளிகள் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 0.45 சதவீத நோயாளிகள், வெண்டிலேட்டர் உதவியுடனும், 2.7 சதவீதம்பேர் ஆக்சிஜன் உதவியுடனும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்தியாவில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 80 ஆயிரத்தை கடப்பதற்கு 106 நாட்கள் ஆனது. ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி போன்ற வளர்ந்த நாடுகளில், 80 ஆயிரம் எண்ணிக்கை 44 முதல் 66 நாட்களில் எட்டி விட்டது.

எனவே, பிரதமர் மோடி தலைமையில் கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெறும்.

அருணாசலபிரதேசம், சண்டிகார், லடாக், மேகாலயா, மிசோரம், புதுச்சேரி, அந்தமான், தாத்ரா நகர் ஹவேலி ஆகிய 8 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை. சிக்கிம், நாகாலாந்து, டாமன்- டையு, லட்சத்தீவு ஆகிய மாநிலங்களில் இதுவரை பாதிப்பு இல்லை.

2 ஆண்டுகளுக்கு அனைவரும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். யாரும் மருத்துவ பணியாளர்களை புறக்கணிக்கக் கூடாது. அறிகுறி வந்தவுடன் பரிசோதனைக்கு வர வேண்டும். ‘ஆரோக்ய சேது’ செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »