Press "Enter" to skip to content

மாணவர்களின் உயிருடன் விளையாடும் விபரீத போக்கை கைவிடுங்கள் – முக ஸ்டாலின் வலியுறுத்தல்

10-ம் வகுப்பு பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் என்றும், மாணவர்களின் உயிருடன் விளையாடும் விபரீத போக்கை அரசு கைவிட வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ந் தேதி வரை தொடர்கிற நிலையில், 5-ம் கட்ட ஊரடங்கு குறித்து உறுதியாக எதையும் இப்போது சொல்ல முடியாத சூழலில், ஜூன் 1-ந்தேதி 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் என அறிவிக்கும் தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பிடிவாதமான நிலைப்பாடு, மாணவர்கள் மீதான அக்கறையற்ற தன்மையையே காட்டுகிறது.

பெற்றோரும், மாணவர்களும் பொதுத்தேர்வு வேண்டாம் எனச் சொல்லவில்லை. நோய்த்தொற்றும், ஊரடங்கும் நீடிக்கின்ற பதற்றம் நிறைந்த காலத்தில் அவசரப்பட்டு நடத்த வேண்டாம் என்பதைத்தான் வலியுறுத்துகிறார்கள்.

அரசாங்கமோ மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு, வெளியூர் சென்ற மாணவர்கள் திரும்பிவர இ-பாஸ் என நெருக்கடியை உருவாக்கி, பெற்றோரையும், மாணவரையும் அச்சுறுத்துகிறது. இதனால் அவர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

மாணவி ஒருவரின் தாயான கே.ஏ.பத்மஜா என்பவர், தமிழ்நாட்டின் முதல்-அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதம் வெளியாகியுள்ளது. அதில், தயவுசெய்து, நீங்கள் கொரோனாவில் சாவும் மனிதர்களின் உயிரைக் கவனியுங்கள். குடும்பங்களில் இருக்கும் வறுமையை முற்றும் நீக்க வழிவகையை நடைமுறைப்படுத்துங்கள். கொரோனா நோய்த்தொற்று இனி இருக்காது என்ற நிலையை உருவாக்குங்கள். அதற்குப் பிறகு நாங்கள் எங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். சகஜநிலை வந்த பிறகு ஒரு மூன்று வாரம் பாடங்களைத் திருப்புதலுக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அதற்குப் பிறகு தேர்வு வையுங்கள் எனத் தெரிவித்திருக்கிறார்.

ஒரு தாயின் தவிப்பாகவும், உள்ளக்குமுறலாகவும், பெற்றோரின் அக்கறையாகவும், ஆதங்கமாகவும் உள்ள இந்தக் கடிதத்தின் வரிகள்தான், பத்தாம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவ-மாணவியருடைய பெற்றோரின் மனநிலையாக உள்ளது.

அதனைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், ஜூன் 1-ந்தேதி தேர்வு நடத்தப்படும் என்றும், ஆசிரியர்களுக்குப் பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அழிச்சாட்டியமாக அறிவித்துக் கொண்டே இருக்கிறார்.

தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள் பலரும், ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு, நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், பள்ளிகள் திறக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வழக்கமான முறையில் வகுப்புகள் நடைபெற்று, அதற்குப்பின் பொதுத்தேர்வு நடத்துவதே மாணவர்களின் மன, உடல் நலனுக்கும், எதிர்கால நலனுக்கும் உகந்தது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதில் ஆரம்பத்திலிருந்தே அலட்சியம் காட்டி வருவதுடன், முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகளையும், அறிவியலுக்குப் புறம்பான ஆரூடங்களையும் தெரிவித்து வருகிறது அ.தி.மு.க. அரசு. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் காட்டும் அவசர கதியும் அதுபோலத்தான் உள்ளது.

எனவே மாணவர்களின் உயிருடன் விளையாடும் விபரீத மனப்போக்கைக் கைவிட்டு, பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்துமாறு மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அ.தி.மு.க. அரசின் ஊரடங்கு கால நிவாரணங்கள் ஏதும் விவசாயிகளுக்கோ, விவசாய தொழிலாளர்களுக்கோ முறைப்படி சென்றடையாததால் வேளாண் தொழிலை மட்டுமே நம்பியிருந்த விவசாயிகள் நிம்மதியிழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உழவு மானியம், டிராக்டர், டீசல் மானியம் அளிப்பதை உறுதி செய்திட வேண்டும். தேவையான விவசாய கடன் வசதிகள், வட்டி இல்லாமல், பாகுபாடின்றி அனைவருக்கும் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

விதைகள், இயற்கை மற்றும் செயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் போன்றவை எவ்வித தடையுமின்றி கிடைக்கவும், விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு உரிய முக கவசங்கள், கிருமிநாசினி மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களை இலவசமாக அரசே வழங்கிடவும் முதல்-அமைச்சர் உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »