Press "Enter" to skip to content

காணொலி காட்சி மூலம் பாராளுமன்ற நிலைக்குழுக்கள் கூட்டம் நடைபெறுமா? – சபாநாயகருடன் வெங்கையா நாயுடு ஆலோசனை

பாராளுமன்ற நிலைக்குழுக்கள் கூட்டத்தை காணொலி காட்சி மூலம் நடத்துவது குறித்து சபாநாயகருடன் வெங்கையா நாயுடு ஆலோசனை நடத்தினார்.

புதுடெல்லி:

பாராளுமன்ற நிலைக்குழுக்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அக்குழுக்களின் தலைவர்கள் சிலரும், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சிலரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

சில நாடுகளில் பாராளுமன்ற கூட்டம் காணொலி காட்சி மூலம் நடத்தப்படுவதாக கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம், மத்திய அரசு அறிவித்துள்ள பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்கள் பற்றி விவாதிக்கவும், ஆய்வு செய்யவும் பாராளுமன்ற நிலைக்குழுக்கள் கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார்.

இதே கோரிக்கையை வலியுறுத்தி உள்துறை அமைச்சகத்துக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆனந்த் சர்மா மாநிலங்களவை தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இதேபோல் தகவல் தொழில்நுட்ப துறைக்கான பாராளுமன்ற நிலைக்குழுவின் தலைவர் சசி தரூரும் சபாநாயகருக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

இதைத்தொடர்ந்து, இந்த பிரச்சினை தொடர்பாக துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான வெங்கையா நாயுடுவும், பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லாவும் கடந்த 7-ந் தேதி ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்தநிலையில் நேற்று அவர்கள் மீண்டும் ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை கூட்டம் மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவின் அறையில் நடைபெற்றது.

அப்போது, கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பாராளுமன்ற நிலைக்குழுக்களின் கூட்டத்தை காணொலி காட்சி மூலம் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து வெங்கையா நாயுடுவும், ஓம் பிர்லாவும் ஆலோசித்தனர். மேலும் இதுகுறித்து முடிவு எடுக்க வசதியாக, இந்த பிரச்சினை தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு பாராளுமன்றம் மற்றும் மாநிலங்களவையின் பொதுச் செயலாளர்களை அவர்கள் கேட்டுக் கொண்டனர்.

ஊரடங்கு காரணமாக எம்.பி.க்கள் தொகுதிகளுக்கு செல்வதற்கு இருந்து வரும் கட்டுப்பாடுகள் குறித்தும் அவர்கள் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »