Press "Enter" to skip to content

கால் கடுக்க நடந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காவல்துறை செய்த உதவி

சொந்த ஊர்களுக்கு நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போலீசார் இலவசமாக செருப்புகள் வழங்கி உதவி செய்தது பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.

ஆக்ரா:

ஊரடங்கால் வேலையிழந்து சொந்த ஊர்களுக்கு செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களின் நிலையை வார்த்தைகளால் விவரிக்க இயலாது. பல்வேறு பகுதிகளில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போக்குவரத்து வசதிகள் கிடைக்காததாலும், கையில் பணம் இல்லாததாலும் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்வதைப் பார்க்க முடிகிறது. 

சிலர் தங்கள் வாகனங்களில் பயணிக்கின்றனர். சிலர், சொந்த ஊர்களுக்கு செல்லும் ரெயிலைப் பிடிப்பதற்காக நீண்ட தூரம் நடந்து செல்கின்றனர். செல்லும் வழியில் கிடைக்கும் உதவிகளைப் பெற்று பயணத்தை தொடர்கின்றனர். 

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் ஆக்ராவில், நடந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு காவல்துறை சார்பில் இலவசமாக காலணிகள், ஷூக்கள் வழங்கி உதவி செய்கின்றனர். இதற்காக சதார் சர்க்கிளில் சாலையோரம் ஆங்காங்கே பிரத்யேக ஸ்டால்களை அமைத்துள்ளனர். 

இதுபற்றி சதார் காவல் அதிகாரி விகாஸ் ஜெய்ஸ்வால் கூறுகையில், ‘புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தொலைதூரத்தில் இருந்து இங்கு வருகிறார்கள். அவர்களில் பலர் செருப்பு இல்லாமல் வெறுங்காலில் நடந்து வருகிறார்கள். அதனால்தான் இலவச செருப்புகளை வழங்கும் ஸ்டால்களை அமைத்துள்ளோம்’ என்றார்.

இதேபோல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து வெளியேறி நடந்து செல்லும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, போலீசார் செருப்புகள் வழங்கி அனுப்பி வைத்தனர். மேலும் உணவு பொட்டலங்கள், பிஸ்கெட்டுகள், தண்ணீர் பாட்டில்களும் வழங்கினர்.

கால் கடுக்க நடந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு, தங்களால் இயன்ற அளவுக்கு உதவும் காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டி உள்ளனர். 

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »