Press "Enter" to skip to content

காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் பயங்கரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொலை

காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் ஸ்ரீநகரில் உள்ள நவ்ஹடல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று நள்ளிரவு பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. 

இந்த தகவலையடுத்து அப்பகுதிக்கு விரைந்த படையினர் நள்ளிரவு 2 மணியளவில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். 

அப்போது அங்கு பதுங்கி இருந்து ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுடத்தொடங்கினர். 

இதனால், பாதுகாப்பு படையினரும் பதில் தாக்குதல் நடத்தினர். பின்னர் சில மணி நேர அமைதிக்கு பின் இன்று காலை 8 மணியளவில் மீண்டும் துப்பாக்கிச்சண்டை தொடங்கியது.

இதனால் இரு தரப்பிற்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வந்தது. இறுதியில் துப்பாக்கிச்சுடு தாக்குதலில் ஈடுபட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் பயங்கரவாதிகள் இரண்டு பேரையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். என்கவுண்டரில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் வெடிகுண்டுகளும், துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டது. 

இந்த என்கவுண்டரில் கொல்லப்பட்ட இரு பயங்கரவாதிகளில் ஒருவன் ஸ்ரீநகரை சேர்ந்தவன் என்றும் மற்றொருவன் புல்வாமா பகுதியை சேர்ந்தவன் என்றும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், பயங்கரவாதிகளுடன் நடந்த இந்த துப்பாக்கிச்சண்டையில் பாதுகாப்பு படையினர் சில காயமடைந்தனர். 

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியில் தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »