Press "Enter" to skip to content

சீனாவில் 5.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் – இடிபாடுகளில் சிக்கி 4 பேர் பரிதாப பலி

சீனாவில் 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

பீஜிங்:

சீனாவின் மத்திய நகரமான வுகானில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் அந்த நாட்டை கடுமையாக உலுக்கியது. இந்த உயிர்க்கொல்லி வைரசால் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் செத்து மடிந்தனர். இதனால் ஒட்டுமொத்த சீனாவும் ஆட்டம் கண்டது. 

ஊரடங்கை அமல்படுத்தி மக்களை தனிமைப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் வைரஸ் பரவலை சீனா வெற்றிகரமாக கட்டுக்குள் கொண்டு வந்தது.

கொரோனா பேரிடரில் இருந்து மீண்டு சீன மக்கள் மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில், அந்த நாட்டின் தென்மேற்கு மாகாணமான யுனானை நேற்று பயங்கர நிலநடுக்கம் தாக்கியது.

யுனான் மாகாணத்தில் கியாஜியா நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.0 புள்ளிகளாக பதிவானது. மேலும் இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக சீன புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.

யுனான் மாகாணத்தில் உள்ள 15-க்கும் மேற்பட்ட நகரங்களை இந்த நிலநடுக்கம் கடுமையாக உலுக்கியது. வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் அச்சமடைந்த மக்கள் அலறியடித்தபடி கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளிலும், திறந்தவெளி மைதானங்களிலும் தஞ்சம் அடைந்தனர்.

இதில் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கினர். நிலநடுக்கத்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவ வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் குவிக்கப்பட்டு மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

கட்டிட இடிபாடுகளில் இருந்து 4 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 24 பேர் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »