Press "Enter" to skip to content

சாலையில் கிடந்த ஏழரை கோடி ரூபாய் காவல்துறையில் ஒப்படைப்பு – அமெரிக்க தம்பதிக்கு குவியும் பாராட்டு

அமெரிக்காவில் சாலையில் கிடந்த ஏழரை கோடி ரூபாயை போலீசில் ஒப்படைத்த தம்பதிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

வாஷிங்டன்:

அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் கரோலின் நகரை சேர்ந்த தம்பதி டேவிட்-எமிலி சாண்டஸ்.

ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கிக்கிடந்த இவர்கள் காரில் நெடுந்தூர பயணம் மேற்கொள்ள விரும்பினர். அதனால் கணவன், மனைவி இருவரும் தங்களின் 2 மகன்களை அழைத்துக் கொண்டு காரில் புறப்பட்டனர்.

செல்லும் வழியில் சாலையின் நடுவே 2 பைகள் கேட்பாராற்று கிடந்தது. இதைப் பார்த்த டேவிட்-எமிலி சாண்டஸ், யாரோ குப்பைகளை மூட்டைக்கட்டி சாலையில் வீசி சென்றிருக்கிறார்கள் என்று நினைத்தனர். குப்பையை அப்புறப்படுத்தும் நோக்கில் 2 பைகளையும் தங்கள் காரில் எடுத்து போட்டுக்கொண்டு புறப்பட்டனர்.

அதன்பின்னர் அவர்கள் அந்த பைகளை மறந்துவிட்டார்கள். வீட்டுக்கு திரும்பியதும் காரில் இருந்து இறங்கியபோதுதான் அவர்களுக்கு அந்த பைகள் நினைவுக்கு வந்தது.

பைகளை அப்புறப்படுத்தும் முன் அதில் என்ன இருக்கிறது என காண விரும்பினர். பைகளைப் பிரித்துப் பார்த்த அவர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது.

அந்த 2 பைகளிலும் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் இருந்தன. அவற்றை எண்ணிப் பார்த்தபோது 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.7 கோடியே 56 லட்சத்து 95 ஆயிரம்) இருந்தது.

இதைத்தொடர்ந்து, டேவிட் -எமிலி சாண்டஸ் தம்பதி உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்களிடம் 1 மில்லியன் டாலரை அப்படியே ஒப்படைத்தனர். போலீசார் இந்த பணம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

சாலையில் கிடைத்த சுமார் ஏழரை கோடி ரூபாயை போலீசிடம் ஒப்படைத்த டேவிட்- எமிலி சாண்டஸ் தம்பதிக்கு பலதரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »