Press "Enter" to skip to content

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு ரூ.1000 கோடி நிதி- பிரதமர் மோடி அறிவிப்பு

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு இடைக்கால நிவாரணமாக, 1000 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

கொல்கத்தா:

அம்பன் புயலால் மேற்கு வங்காள மாநிலத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கிறார்கள். கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. புயல் தொடர்பான விபத்துகளில் 72 பேர் பலியாகி உள்ளனர். இதேபோல் ஒடிசாவின் கடலோர மாவட்டங்களிலும் புயல் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த நிலையில், மேற்கு வங்காளத்தில் புயல் பாதிப்பு பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் சென்றபடி பார்வையிட்டார். மேலும் பசிர்ஹத் பகுதியில் புயல் பாதிப்பு தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடியுடன், முதல்வர் மம்தா பானர்ஜி, ஆளுநர் ஜெகதீப் தங்கார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர் பேசிய பிரதமர் மோடி, அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளத்திற்கு மத்திய அரசால் 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார். மேலும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.

புயலால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »