Press "Enter" to skip to content

இங்கிலாந்து வருபவர்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் பின்பற்ற வேண்டும் – உள்துறை செயலாளர்

இங்கிலாந்து நாட்டிற்குள் நுழைபவர்கள் 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல் தெரிவித்துள்ளார்.

லண்டன்:

இங்கிலாந்து நாட்டில் தற்போதைய நிலவரப்படி 2 லட்சத்து 54 ஆயிரத்து 195 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அந்நாட்டில் இதுவரை 36 ஆயிரத்து 393 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையில், கடந்த சில நாட்களாக இங்கிலாந்தில் வைரசின் தாக்கம் சற்று குறைந்து வருவதால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து பிரதமர் அலுவலத்தில் உள்துறை செயலாளர் ப்ரீதி பட்டேல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். 

அந்த சந்திப்பில் முக்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அதன் படி, இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் மீண்டும் பரவுவதை தடுக்கும் விதமாக சில நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தெரிவித்தார்.

வெளிநாடுகளில் இருந்து ஜூன் 8 முதல் இங்கிலாந்து நாட்டிற்குள் நுழைபவர்கள் 14 நாட்கள் தங்களை தாங்களாகவே சுய தனிமைப்படுத்தலுக்கு கட்டாயம் உட்படுத்திக்கொள்ள வேண்டும். சுய தனிமைப்படுத்தலை மீறுபவர்களுக்கு ஆயிரம் பவுண்ட்கள் அபராதம் விதிக்கப்படும். 

வெளிநாடுகளில் இருந்து நுழைபவர்கள் அவர்களது விவரங்களை அதிகாரிகளுக்கு தெரிவிக்கவேண்டும். 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உள்படுபவர்கள் அடிக்கடி அதிகாரிகளை தொடர்பு கொண்டு தங்கள் உடல்நிலை தொடர்பான தகவல்களை தெரிவிக்க வேண்டும்.   

இந்த தனிமைப்படுத்தல் விதிமுறைகள் அயர்லாந்து நாட்டில் இருந்து வருபவர்களுக்கும், மருத்துவம் மற்றும் விவசாயம் சார்ந்த துறையினருக்கு பொருந்தாது.

மேலும், இங்கிலாந்து குடியுரிமை இல்லாதவர்கள் நாட்டிற்குள் நுழைய முயற்சிக்கும்போது அவர்களது ஆவணங்களின் அடிப்படையில் நாட்டிற்குள் செல்ல அனுமதி கொடுக்கவும், மறுக்கவும் எல்லை படையினர் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என ப்ரீதி பட்டேல் தெரிவித்துள்ளார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »