Press "Enter" to skip to content

நச்சுநுண்ணுயிர் (வைரஸ்) தொற்றில் இருந்து காக்க… பழங்கள், காய்கறிகளை எவ்வாறு பயன்படுத்துவது?

வைரசில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள கிருமி இல்லாத மற்றும் ரசாயனம் கலக்காமல் பழங்கள், காய்கறிகளை பயன்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்…

கொரோனா வைரசின் தாக்கம்  தற்போது உலகம் முழுவதும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. 

வைரசில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள கிருமி நாசினி கொண்டு கை கழுவ வேண்டும். 20 நொடிகள் சோப் போட்டு கைகளை நன்கு கழுவ வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் என பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள நேரத்தில் நாம் கடைகளில் இருந்து வாங்கி வரும் பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்துவது எப்படி என்பதை இங்கு காண்போம்.

அனைத்து வயதினரும் பச்சை காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவதை டாக்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த இரண்டு வகையான உணவுகள் பச்சையாகவோ, மரங்களிலிருந்தோ, புதர்களிலிருந்தோ அல்லது மண்ணின் கீழிருந்தோ கிடைப்பதால் அவற்றை உட்கொள்வது எவ்வளவு பாதுகாப்பானது என்ற சந்தேகம் எழும். 

மேலும், தயாரிப்பு முதல் சேமிப்பு நேரம் வரை பாக்டீரியாக்கள் உங்கள் காய்கறிகளில், பழங்களில் வாழ வாய்ப்புகள் உள்ளன.

அதிகளவு ரசாயனம், பூச்சிக்கொல்லிகள் உண்மையில் நச்சுத்தன்மை உடையவை. நோய் எதிர்ப்பு சக்தியை சீர்குலைப்பதன் மூலம் நமது ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த ஆபத்துகளில் இருந்து காத்துக் கொள்ள நாம் செய்ய வேண்டியவை என்ன என்பதை பார்ப்போம்.

காய்கறி அல்லது பழத்தை வெட்டிய பின் ஒருபோதும் கழுவ வேண்டாம். அப்படி கழுவும்போது அவை வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை இழக்கின்றன. மேலும் அசுத்தங்கள் ஏதேனும் இருந்தால் அவை மேற்பரப்பில் இருந்து உள்ளே பரவுகின்றன.

பழங்கள் மற்றும் காய்கறிகளை கழுவுவதால் அவற்றின் மேற்பரப்பில் உள்ள பாக்டீரியாக்களை அகற்ற முடியும். ஆனால் பூச்சிக்கொல்லிகள் மற்றும் அதன் மீது தெளிக்கப்படும் பிற ரசாயனங்களை அகற்ற முடியாது.

பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கழுவுவதற்கான சிறந்த வழி:

காய்கறிகள் மற்றும் பழங்களை உபயோகிப்பதற்கு முன்பு தண்ணீரில் கழுவினால் மட்டும் போதாது. ஏன் என்றால் அவைகளில் படிந்திருக்கும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் தாக்கம் உடலுக்கு கெடுதி விளைவிப்பவை. 

அதிலும் விளைச்சலின் இறுதி கட்டத்தில் பயிர்களின் மீது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகள் காய்கறி மற்றும் பழங்களின் மீது அப்படியே ஒட்டிக்கொண்டிருக்கும். 

அது மனிதர்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்திற்கும், உள்ளுறுப்புகளுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தும். அதனால் காய்கறிகள் மற்றும் பழவகைகளை சாப்பிடுவதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

அப்படி கழுவுவது மட்டுமே போதுமானதல்ல. மீண்டும் 90 சதவீத நீருடன் 10 சதவீதம் வினிகர் சேர்த்து அதில் காய்கறிகளை சிறிது நேரம் ஊறவைத்து விட்டு மென்மையாக கழுவ வேண்டும். அப்படி கழுவும்போது காய்கறிகளின் தோல் பகுதிக்கு சேதம் ஏற்பட்டு விடக்கூடாது.

ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை சாறு கலந்து சிறிது சமையல் சோடாவும் சேர்த்து அதனை பழங்கள் மீது தெளிக்க வேண்டும். பின்னர் துணியால் சுத்தம் செய்துவிட்டு சாப்பிடலாம்.

ஒருபோதும் சோப்புகளை பயன்படுத்தி பழங்களையோ, காய்கறிகளையோ கழுவக்கூடாது.

தக்காளி, உருளைக்கிழங்கு போன்றவற்றை சுடுநீரில் சிறிது நேரம் போட்டுவைத்துவிட்டு பிறகு தோலை உரித்து பயன்படுத்துவது நல்லது. 

கீரைகளைக் குளிர்ந்த நீர் கொண்ட பாத்திரத்தில் போட்டு நன்றாக அலசுங்கள். கீரைகளை முன்னும் பின்னுமாக அலசி, கழுவுங்கள். பிறகு, குழாய் அடியில் கீரைகளை அலசுங்கள். இன்னொரு முறை வேண்டுமானாலும் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சரியாகக் கழுவிய பின் அவற்றை உட்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இப்படி செய்வதன் மூலம் எந்த வைரசும் நம்மை தொற்றாது, நமது ஆரோக்கியமும் பேணி பாதுகாக்கப்படும் என்பது உண்மைதானே!

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »