Press "Enter" to skip to content

சர்வதேச விமானங்களில் நடு இருக்கையை முன்பதிவு செய்யலாம்- ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

சர்வதேச விமானங்களில் அடுத்த 10 நாட்களுக்கு நடு இருக்கையை முன்பதிவு செய்து பயணிகளை அழைத்து வரலாம் என ஏர் இந்தியாவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

புதுடெல்லி:

கொரோனாவால் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் தவித்த இந்தியர்கள், வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். வெளிநாட்டு வாழ் இந்தியர்களை அழைத்து வரும் போது கொரோனா வைரஸ் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஏர் இந்தியா நிறுவனம் பின்பற்றவில்லை என விமானி தேவன் கனானி என்பவர் மும்பை ஐகோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த மும்பை ஐகோர்ட், நடு இருக்கையை காலியாக வைக்க வேண்டும் என்ற உத்தரவை ஏன் மனதில் கொள்ளவில்லை? என கேள்வி எழுப்பியதுடன், ஏர் இந்தியா நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 2ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக ஏர் இந்தியா மற்றும் மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அவசர மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி, அடுத்த 10 நாட்களுக்கு திட்டமிடப்படாத சர்வதேச விமானங்களில் (சிறப்பு விமானங்கள்) நடு இருக்கைகளை முன்பதிவு செய்து பயணிகளை அழைத்து வரலாம் என ஏர் இந்தியாவுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

அதேசமயம், வர்த்தக விமான நிறுவனங்களின் நலனை விட குடிமக்களின் ஆரோக்கியம் குறித்து அரசாங்கம் அதிகம் கவலைப்பட வேண்டும் என்றும் தலைமை  நீதிபதி குறிப்பிட்டார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »