Press "Enter" to skip to content

சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு

கொரோனா தோன்றியது குறித்த விசாரணைக்கு ஒத்துழைப்பதாக சீனா கூறியதற்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது.

ஜெனீவா:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ், உலகையே அச்சுறுத்தி வருகிறது. அந்த வைரஸ், சீனாவின் வுகான் நகரில் உள்ள வைராலஜி ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கப்பட்டதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. அதை சீனா மறுத்துள்ளது.

அதே சமயத்தில், கொரோனா எப்படி உருவானது என்பது பற்றி விசாரணை நடத்த சர்வதேச விஞ்ஞானிகள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த முயற்சிக்கு ஒத்துழைப்பதாக சீன அரசு ஆலோசகரும், சீன வெளியுறவுத்துறை மந்திரியுமான வாங் யி கூறியுள்ளார். இந்த விசாரணை, பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீனாவுக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதன் சுகாதார அவசரகால திட்டத்தின் செயல் இயக்குனர் மைக்கேல் ரியான் ஜெனீவாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சீனாவின் அறிவிப்பை வரவேற்கிறோம். சீன அதிகாரிகளும், உலகம் முழுவதும் உள்ள அரசுகளும், நாங்களும் கூட இந்த வைரஸ் எப்படி உருவானது என்பதை அறிய ஆர்வமாக இருக்கிறோம்.

அதே சமயத்தில், இந்த விசாரணை குழுவில், பல நாடுகளை சேர்ந்த விஞ்ஞான நிபுணர்கள் இடம்பெற வேண்டும். இந்த விசாரணை திருப்திகரமாக அமையும் என்று நம்புகிறோம். சீனாவில் உள்ள எங்கள் சகாக்களுடன் தொடர்ந்து விவாதித்து வருகிறோம்.

விசாரணை தொடங்குவதற்கான தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. கூடிய விரைவில் விசாரணை தொடங்குவதை காண ஆவலாக இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »