Press "Enter" to skip to content

கொரோனாவால் அதிக பாதிப்பு: உலக அளவில் 7-வது இடத்தில் இந்தியா

உலக அளவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 7-வது இடத்தில் இந்தியா உள்ளது.

புதுடெல்லி:

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகிறது.

சின்னஞ்சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை அனைத்து நாடுகளுக்கும் பரவி கிட்டத்தட்ட 63 லட்சம் பேரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த வைரஸ் பிடியில் சிக்கி உலகம் முழுவதும் சுமார் 3 லட்சத்து 75 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் உயிரிழப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

அவ்வாறு கடந்த சில தினங்களாக வெளியிடப்படும் பட்டியல் ஒவ்வொரு நாளும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை காட்டுகிறது. அந்த வகையில் இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 24 மணி நேரத்தில் 8,392 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,90,535 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் 9-வது இடத்தில் இருந்து, 7-வது இடத்துக்கு இந்தியா சென்றுள்ளது. இந்த விவரம் உலக சுகாதார நிறுவனத்தின் தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முதல் 3 இடங்களில் முறையே அமெரிக்கா, பிரேசில், ரஷியா உள்ளன. அடுத்தடுத்த இடங்களில் இங்கிலாந்து, ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளுக்கு பிறகு 7-வது இடத்தில் இந்தியா உள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு 67,655 பேருக்கு நோய்த்தொற்று உறுதியாகி உள்ளது. தமிழகத்தில் 23,495 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேசிய தலைநகர் டெல்லியில் இந்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

குஜராத்தில் 16,794, ராஜஸ்தானில் 8,980, உத்தரபிரதேசத்தில் 8,191, மத்தியபிரதேசத்தில் 8,089, மேற்குவங்காளத்தில் 5,501, பீகாரில் 3,872, ஆந்திராவில் 3,674, கர்நாடகாவில் 3,408, தெலுங்கானாவில் 2,698, ஜம்மு காஷ்மீரில் 2,446, பஞ்சாபில் 2,263, அரியானா 2,202, ஒடிசாவில் 2,104, அசாமில் 1,390, கேரளாவில் 1,326 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரகாண்டில் 929, ஜார்கண்டில் 610, சத்தீஸ்கார் 447, இமாசலபிரதேசம் 339, திரிபுரா 321, சண்டிகார் 294, லடாக் 77, மணிப்பூரில் 81, புதுச்சேரியில் 75, கோவாவில் 71, நாகாலாந்தில் 43, அந்தமான் நிகோபர் 33, மேகாலயா 27, அருணாசலபிரதேசத்தில் 5, தாதர்நகர் ஹவேலி 2, மிசோரம் மற்றும் சிக்கிமில் தலா ஒருவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது.

மேலும் இதுவரை இல்லாத அளவில் 24 மணி நேரத்துக்குள் 230 பேரின் உயிரையும் கொரோனா பறித்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கையும் 5,394 ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக உயிரிழந்த 230 பேரில், 89 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தில் வசித்து வந்தவர்கள் ஆவார்கள். டெல்லியில் 57, குஜராத்தில் 31, தமிழகத்தில் 13, உத்தரபிரதேசத்தில் 12, மேற்குவங்காளத்தில் 8, மத்தியபிரதேசத்தில் 7, தெலுங்கானாவில் 5, கர்நாடகாவில் 3, ஆந்திராவில் 2, பீகார், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் தலா ஒருவரையும் 24 மணி நேரத்துக்குள் கொரோனா உயிரிழக்கச் செய்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 93,322 ஆக உள்ளது.

இந்த பாதிப்பில் இருந்து 48.19 சதவீதம் பேர், அதாவது 91,819 பேர் சிகிச்சையின் மூலம் பூரண குணமடைந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகி வீடு திரும்பி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »