Press "Enter" to skip to content

“தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள்”- 9 முன்னணி விமான நிறுவனங்களுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு

ஊக்க சலுகைகளை வழங்குகிறோம். தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என்று 9 முன்னணி விமான நிறுவனங்களுக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னை:

தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் ஈர்ப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். யாதும் ஊரே திட்டம், நாடுகளுக்கான சிறப்பு அமைவுகள், வெளிநாட்டு தூதுவர்கள் உடனான சந்திப்பு நிகழ்ச்சி என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது உலகளவில் விமான துறையில் தலைசிறந்த 9 முன்னணி விமான நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய நேரிடையாக அழைப்பு விடுத்து தனிப்பட்ட முறையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவல் உலக பொருளாதாரச் சூழலில் ஏற்படுத்தியுள்ள விளைவுகளால், சில நாடுகளில் உள்ள தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை இந்தியாவிற்கு இடம் பெயர்ந்திட முடிவெடுத்துள்ளன. அந்த முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ‘முதலீடுகளை ஈர்ப்பதற்கான சிறப்பு பணிக்குழு’வை தலைமை செயலாளர் க.சண்முகம் தலைமையில் அமைத்துள்ளார்.

அண்மையில் ரூ.15 ஆயிரத்து 128 கோடி முதலீட்டுக்கான 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டது. இது இந்த பேரிடர் காலத்திலும் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள தலைசிறந்த இடமாக தமிழ்நாட்டை கருதுவதை எடுத்துக்காட்டுகிறது.

உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களை தமிழ்நாட்டில் தொழில் தொடங்க ஈர்ப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது ‘யுனைடெட் டெக்னாலஜி’ நிறுவனத்தின் முதன்மைச்செயல் அதிகாரி கிரிகோரி ஜே ஹேயஸ், ‘ஜெனரல் எலக்ட்ரிக்’ நிறுவனத்தின் முதன்மைச்செயல் அதிகாரி லாரன்ஸ் கல்ப், ‘போயிங்’ நிறுவனத்தின் முதன்மைச்செயல் அதிகாரி தவே கல்ஹவுன், ‘லாக்ஹீட் மார்டின்’ நிறுவனத்தின் முதன்மைச்செயல் அதிகாரி மரிலின் ஹீவ்சன், ‘சாப்ரான்’ நிறுவனத்தின் முதன்மைச்செயல் அதிகாரி பிலிப் பெட்டிட்கோலின், ‘ரோல்ஸ் ராய்ஸ்’ நிறுவனத்தின் முதன்மைச்செயல் அதிகாரி வாரன் ஈஸ்ட், ‘ஏர்பஸ்’ நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கைலம் பவுரி, ‘லியானார்டோ’ நிறுவனத்தின் முதன்மைச்செயல் அதிகாரி அலெசாண்ட்ரோ புரபியுமோ மற்றும் ‘ஹனிவெல்’ நிறுவனத்தின் முதன்மைச்செயல் அதிகாரி டேரிபஸ் ஆடம்சைக் ஆகிய 9 முன்னணி விமான நிறுவனங்களின் தலைவர்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்திட நேரிடையாக அழைப்பு விடுத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில், தமிழ்நாட்டில் புதிய முதலீடுகளை மேற்கொள்வதில் உள்ள பல்வேறு சாதகமான அம்சங்களையும், சிறப்பான தொழில் சூழலையும் குறிப்பிட்டு, புதிய தொழில் முதலீடுகளுக்கு தமிழ்நாடு அரசு சிறப்பான ஆதரவை நல்கும் என்றும் அவர்களின் தேவைகளுக்கேற்ப ஊக்க சலுகைகளை வழங்கிடும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »