Press "Enter" to skip to content

ஜூன் 16 முதல் சீன விமானங்களுக்கு தடை – அமெரிக்கா அதிரடி

ஜூன் 16-ம் தேதி முதல் சீன விமானங்கள் தங்கள் நாட்டுக்குள் பறப்பதற்கு அமெரிக்க அரசு தடை விதித்துள்ளது.

வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு இயங்கக்கூடிய 3 விமான நிறுவனங்களும் தங்களது இயக்கத்தை நிறுத்திக் கொண்டன. அதனால் அந்த விமான நிறுவனங்களுக்கு சீனா தடை விதித்தது. ஆனாலும், அமெரிக்காவின் பல்வேறு நகரங்களுக்கு சீன விமானங்கள் இயங்கி வந்தன.

ஜனவரி மாதம் வரை, அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் விமான நிறுவனங்கள் பரஸ்பரம் வாரத்துக்கு சுமார் 325 விமானங்களை இயக்கின. பிப்ரவரியில் அது 20 என்ற அளவுக்கு குறைந்தது. அதிலும் சீன விமானங்கள் மட்டுமே இயங்கின.

மார்ச் மாதத்தில் சீனாவின் விமான ஒழுங்குமுறை ஆணையம் வெளிநாடுகளிலிருந்து இயக்கக்கூடிய விமானங்களுக்கான கட்டுப்பாட்டை விதித்தது. அதன்படி, வாரத்துக்கு ஒரு வெளிநாட்டு விமானம் மட்டுமே அனுமதிக்க முடியும் என்ற முடிவை எடுத்தது.

இதற்கிடையே, அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ், யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனங்கள் தங்கள் இயக்கத்தை தொடங்க சீனாவிடம் அனுமதி கோரின. ஆனால் அதை சீனா கண்டுகொள்ளவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா, 1980-ம் ஆண்டு விமான போக்குவரத்து ஒப்பந்தத்தை சீனா மீறிவிட்டதாக குற்றம்சாட்டியது.

இந்நிலையில், ஜூன் 16-ம் தேதி முதல் சீன நாட்டு விமானங்களை அமெரிக்காவுக்குள் அனுமதிப்பதில்லை. அதேபோல், இங்கிருந்து சீனா செல்வதற்கும் அந்நாட்டு விமான நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது என  அதிரடியாக அறிவித்துள்ளது.

தங்கள் நாட்டு விமான நிறுவனங்கள் மீதான தடையை நீக்காததால் அதிருப்தி அடைந்த அதிபர் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிகிறது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »