Press "Enter" to skip to content

காற்று மாசு குறைவதற்கு உதவிய கொரோனா ஊரடங்கு

கொரோனா வைரஸ் தொற்று நோய் புண்ணியத்தால் இப்போது நமது நாட்டில் காற்று மாசு அளவு கணிசமாக குறைந்திருப்பதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

புதுடெல்லி:

சுவாச காற்று, சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நமது நுரையீரல்கள் சிறப்பாக தமது கடமையை ஆற்றும். ஆனால் சுத்தமான சுவாச காற்று அரிதாகி விட்டது.

அதுவும் டெல்லி, சென்னை போன்ற நகரங்களிலும், தொழில் நகரங்களிலும் காற்றில் மாசு மிக அதிகம். இதனால் பணக்காரர்கள் பலரும் சுத்தமான சுவாச காற்றை சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் பார்லர்களை நாடுகிற நிலை நமது நாட்டிலும் வந்து இருக்கிறது.

ஆனால் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் புண்ணியத்தால் இப்போது நமது நாட்டில் காற்று மாசு அளவு கணிசமாக குறைந்திருப்பதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.

நமது நாட்டில் மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அமலுக்கு வந்த பொதுமுடக்கமான ஊரடங்கு, இன்னும் கட்டுப்பாட்டு பகுதிகளில் தொடர்கிறது.

ஊரடங்கால் வாகன போக்குவரத்துகள் நின்று போயின. தொழிற்சாலைகள் இயங்காமல் போயின. உணவு விடுதிகள், ஓட்டல்கள் மூடப்பட்டன. இதனால் காற்றில் நச்சுக்காற்று கலப்பது குறைந்து போனது.

இன்று (5-ந் தேதி) சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிற நிலையில், இந்தியாவில் கொரோனா ஊரடங்கால் நகர்ப்புறங்களில் காற்றின் தரம், ஒலி மாசுபாடு, தண்ணீர் தரம் உள்ளிட்டவை மேம்பட்டிருக்கிறது என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதுபற்றி பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் காற்றுமண்டல பெருங்கடல் அறிவியல் மையத்தின் பேராசிரியர் எஸ்.கே. சதீஷ் கூறுகையில், “ ஊரடங்கால் இந்தியாவில் காற்றின் தரம், குறிப்பாக நகர்ப்புறங்களில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கிறது. மோசம் என்ற நிலையில் இருந்து திருப்தி அல்லது நல்லது என்ற நிலைக்கு காற்றின் தரம் முன்னேறி உள்ளது. இதற்கு காரணம், மனித செயல்பாடுகள் குறைந்து போனதுதான்” என்கிறார்.

சராசரியாக இந்தியாவின் தென்பகுதியில் துகள்களின் செறிவு 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை குறைந்து இருக்கிறதாம். மேலும், டெல்லி, உத்தரபிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட இந்திய கங்கை படுகை பகுதியில் இது 75 சதவீதமாக உள்ளது என்கிறார் பேராசிரியர் எஸ்.கே. சதீஷ்.

போக்குவரத்து வாகனங்கள், தொழிற்சாலைகள், பயிர்க்கழிவுகள் எரிப்பு, பிற கழிவுகள் எரிப்பு போன்றவைதான் காற்று மாசுவுக்கு முக்கிய காரணம் என அவர் சுட்டிக்காட்டுகிறார். நகரங்களில் பாதிக்கும் மேற்பட்ட காற்று மாசுவுக்கு வாகனங்கள் வெளியிடுகிற புகைதான் காரணம். ஊரடங்கின்போது, பெரும்பாலான வாகன போக்குவரத்து குறைந்து போய்விட்டது என சுட்டிக்காட்டுகிறார் பேராசிரியர் எஸ்.கே. சதீஷ்.

மே மாதம் வெளியான ‘ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்’ என்ற பத்திரிகையில் வெளியான 2 ஆய்வு முடிவுகள், கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, நைட்ரஜன் ஆக்சைடு உள்ளிட்ட 2 காற்று மாசு அளவு வெகுவாக குறைந்து விட்டதாக காட்டுகின்றன.

இந்தியாவில் செயற்கை கோள் தரவுகளும் காற்றில் துகள்கள் அளவு குறிப்பிடத்தக்க அளவு சரிவு கண்டுள்ளதை காட்டுகின்றன.

மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளும் காற்று மாசு குறைந்திருப்பதை படம் பிடித்துக்காட்டுகின்றன.

காந்திநகர் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணிஷ் குமார் சிங் இதுபற்றி குறிப்பிடுகையில், “காற்று மாசுவை குறைப்பதற்கு எதிர்காலத்தில் இதுபோன்ற பொதுமுடக்கத்தை பயன்படுத்தலாம். இந்த பொதுமுடக்கத்தால் நமது இயற்கை தாய் இயல்பு நிலைக்கு மீட்கப்பட்டிருக்கிறாள். டெல்லியில் குளிர்காலத்தின்போது நாம் கண்டிருக்கிற காற்றுமாசு குறைப்பதற்கு எதிர்காலத்தில் பொது முடக்கத்தை பயன்படுத்தலாம்” என்கிறார்.

ஊரடங்கு நடவடிக்கை எப்போது அமலுக்கு வந்ததோ, அப்போது மக்கள் சுற்றுச்சூழலை பற்றி சிந்திக்கவில்லை; ஒரு முழுமையான பொது முடக்கத்தின் வீழ்ச்சியைத்தான் மக்கள் கண்டனர். நாட்கள் செல்லச்செல்ல வீட்டுக்குள் வாழ்க்கையை கழிப்பதில் சிரமப்பட்டபோது, சுற்றுச்சூழல் தெளிவான வழிகளில் மாறுவதை நாம் கவனிக்க தொடங்கினோம் என்கிறார் சுற்றுச்சூழல் என்ஜினீயரான போஸ் கே வர்கீஸ்.

கொரோனா வைரஸ் தொற்றால் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள விளைவுகளை இன்னும் யாரும் உண்மையான அளவுக்கு அறியவில்லை என்றாலும் அதை ஒரு பகுப்பாய்வின்மூலம் விளக்க முடியும் என்று அவர் குறிப்பிடுகிறார். ஊரடங்கு நடவடிக்கைகள் காற்று மாசு அளவை குறைக்க உதவுவதுடன், எதிர்வரும் பருவமழைக்காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சொல்லப்படுகிறது.

ஓசோன் துளையும் இயல்பாகவே சரியாவது போன்ற பார்க்க முடியாத விளைவுகளையும் இந்த பொது முடக்கம் ஏற்படுத்தி உள்ளது என்று ஆணித்தரமாக குறிப்பிடுகிறார் போஸ் கே வர்கீஸ்.

விமான போக்குவரத்தை குறைத்ததால் துகள்கள் குறைந்தன; காற்று மண்டலத்தின் மேல் பசுமை குடில் வாயு உமிழ்வுகள் குறைந்து இருக்கின்றன. இப்படி எல்லா விதத்திலும் சுற்றுச்சூழல் மாசு குறைந்து இயல்பான நிலைக்கு திரும்ப உதவியதற்காக கொரோனாவுக்கு நன்றி சொல்வதா அல்லது கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்குக்கு நன்றி சொல்லவா?!

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »