Press "Enter" to skip to content

28 லட்சம் பேரை கொண்ட மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை

சீனாவில் வுகான் நகரைத் தொடர்ந்து 28 லட்சம் பேரைக்கொண்ட மேலும் ஒரு நகரில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

பீஜிங்:

சீனாவின் மத்திய நகரமான வுகானில் கடந்த டிசம்பர் 1-ந் தேதி முதன்முதலாக கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இந்த 6 மாத காலத்தில் அது உலகம் முழுவதும் பரவி விட்டது.

அங்கு குவாங்டாங் மாகாணத்தில் நேற்று ஒருவருக்கு வெளிநாட்டு தொடர்பின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் 326 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 245 பேர் வுகான் நகரை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 84 ஆயிரத்து 160 ஆக உயர்ந்துள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கையும் 4,638 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவில் 1 கோடியே 12 லட்சம் மக்கள் தொகையைக் கொண்டுள்ள வுகான் நகரில் உள்ள அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்படுகிறது. இதற்கு 126 மில்லியன் டாலர் (சுமார் ரூ.945 கோடி) செலவாகும். இதுவரை 1 கோடி பேருக்கு பரிசோதனை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. அதில் 300 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சீனாவில் ஹிலோங்ஜியாங் மாகாணத்தில், ரஷிய எல்லையில் உள்ள முடஞ்சியாங் நகரத்திலும் அங்குள்ள 28 லட்சம் மக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அங்கு கடந்த வாரத்தில் 15 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அனைவருக்கும் இப்போது கொரோனா பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

நகராட்சி சுகாதார அதிகாரிகள் தங்களது நியூக்ளிக் அமில பரிசோதனை குழுவை மேலும் விரிவுபடுத்த தீர்மானித்துள்ளனர் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »