Press "Enter" to skip to content

வீடு, வீடாக கணக்கெடுப்பும், உடனடி பரிசோதனையும் நடத்துங்கள் – மத்திய அரசு அதிரடி உத்தரவு

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடியாக அறிவுறுத்தி உள்ளது. வீடு,வீடாக கணக்கெடுப்பு நடத்தி உடனடியாக பரிசோதனை நடத்துவதில் கவனம் செலுத்துமாறு கூறி உள்ளது.

புதுடெல்லி:

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடியாக அறிவுறுத்தி உள்ளது. வீடு,வீடாக கணக்கெடுப்பு நடத்தி உடனடியாக பரிசோதனை நடத்துவதில் கவனம் செலுத்துமாறு கூறி உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவுகிறது. தினசரி 10 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்படுகிறார்கள்.இது வரை பலியானோர் எண்ணிக்கை 7,200 ஆகி உள்ளது.

1 லட்சத்து 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின்னர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். கிட்டத்தட்ட அதே எண்ணிக்கையிலானவர்கள் சிகிச்சையும் பெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் 5,137 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி இருப்பது சாதகமான அறிகுறி ஆகும். இதனால் குணம் அடைகிறவர்களின் விகிதம் 48.49 சதவீதமாக அதிகரித்துள்ளது.

நமது நாட்டைப் பொறுத்தமட்டில் மராட்டியம், தெலுங்கானா, தமிழகம், ராஜஸ்தான், அரியானா, குஜராத், ஜம்மு காஷ்மீர், கர்நாடகம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் ஆகிய 10 மாநிலங்களில் உள்ள 38 மாவட்டங்களில்தான் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.

இந்த இடங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில், இந்த மாவட்டங்களின் கலெக்டர்கள், மாநகராட்சி கமிஷனர்கள், மாவட்ட ஆஸ்பத்திரி சூப்பிரண்டுகள், மருத்துவ கல்லூரி முதல்வர்கள் ஆகியோருடன் உயர் மட்ட ஆய்வுக்கூட்டம் ஒன்றை மத்திய சுகாதாரத்துறை செயலாளர் பிரீத்தி சுதன் காணொலி காட்சி வழியாக நேற்று நடத்தினார்.

இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டார்கள்.

கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வராத பகுதிகளில், கட்டுக்குள் கொண்டுவருவதற்கான உத்தி பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி வரும் நிலையில், வரும் மாதங்களில் மாவட்ட வாரியாக மேற்கொள்ள வேண்டிய திட்டங்களை உருவாக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தின்போது, நகர்ப்புறங்களில் மக்கள் அடர்த்தியாக வாழும் பகுதிகளில் தொற்று பரவலாக இருப்பது பற்றியும், பொது வசதிகளை பகிர்ந்து கொள்ளும் பகுதிகள் குறித்தும், அங்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.

அத்துடன், வீடு வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தவேண்டியதின் முக்கியத்துவம், உடனடியாக பரிசோதனைகள் நடத்த வேண்டியதின் அவசியம், தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ மேலாண்மை மேற்கொள்வதின் முக்கியத்துவம் மற்றும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய கட்டுப்பாட்டு உத்திகள் பற்றி விவாதிக்கப்பட்டது. இவற்றையெல்லாம் கொரோனா கட்டுக்குள் வராத பகுதிகளில் மேற்கொள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், மாநிலங்களை அறிவுறுத்தியது.

கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் இறப்புவிகிதத்தை குறைப்பதற்காக, வயதானவர்கள், நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டவர்கள் போன்ற அதிக ஆபத்து மற்றும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து மாநில அரசு அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சக உயர் அதிகாரிகள் விளக்கினர். பாதிக்கப்பட்டோரின் தொடர்பு தடங்களை கண்டறிவதும் கொரோனா பலியை தடுக்க உதவும் என்பது எடுத்துக்கூறப்பட்டது.

தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கைகள், போதுமான மருத்துவ பரிசோதனைகள், சரியான நேரத்தில் கண்டறிவதற்கான வழிமுறைகள் மீது மாநில அரசு அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. அறிகுறிகள் அதிகரிக்காமல் நோயாளிகள் சரியான நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு மாற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டது.

மாநில அரசு அதிகாரிகள் மேற்கொள்ள மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்திய நடவடிக்கைகள் வருமாறு:-

* சுகாதார உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த சரியாக திட்டமிட வேண்டும். போதுமான எண்ணிக்கையில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். படுக்கை வசதி மேலாண்மைக்கு ஒரு அமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும்.

* ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளின தேவைக்கு ஏற்ப தேவையான உதவிகளை வழங்குவதற்கு மூத்த அதிகாரிகள் அமர்த்தப்படவேண்டும்.

* களப்பணியை பொறுத்தமட்டில், மாநகராட்சி அதிகாரிகள் தலைமை தாங்கி, கட்டுப்பாட்டு நடவடிக்கைக்கு முழு மாநகராட்சி உள்கட்டமைப்பும் பயன்படுத்தப்பட வேண்டும்.

* கொரோனா வைரஸ் தொற்று மேலாண்மை முயற்சிகளுடன், பொதுமக்களுக்கு வழக்கமாக கிடைக்க வேண்டிய மற்றும் அத்தியாவசிய சுகாதார சேவைகளை வழங்கவும் கவனம் செலுத்தப்பட வேண்டும்.

* கொரோனா நோயாளிகளை சரியான நேரத்தில் கண்டறிவதற்கு, வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். கணக்கெடுப்பு குழுக்களை இதற்காக மேம்படுத்த வேண்டும். திறமையான ஆம்புலன்ஸ் நிர்வாகம் இருக்க வேண்டும். ஆஸ்பத்திரிகளில் நோயாளிகளை திறம்பட சோதனை செய்ய வேண்டும். படுக்கை வசதி நிர்வாகம், சிகிச்சை மேலாண்மை ஆகியவற்றில் வாரம் முழுவதும் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் குழுக்களை அமர்த்தி கண்காணிக்க வேண்டும். அப்போதுதான் பலி விகிதங்களை குறைப்பதை உறுதி செய்ய முடியும்.

* பரிசோதனைக்கூடங்கள் பரிசோதனை முடிவுகளை உரிய நேரத்தில் தருவதையும் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் நோயாளிகளை சரியான நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை தர முடியும். பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையை வளர்ப்பதற்கும். உரிய நேரத்தில் சுகாதார சேவைகளை அணுகுவதற்கும், உள்ளாட்சி பகுதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளையும் தொடர்புபடுத்தி, மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு அவர்கள் ஒத்துழைப்பு அளித்து உதவுமாறு செய்ய வேண்டும்.

இவ்வாறு மாநில அரசு அதிகாரிகளுக்கு, மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் அறிவுறுத்தல்களை வழங்கினர் என மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »