Press "Enter" to skip to content

‘பேக்’ செய்ய பயன்படும் நெகிழி (பிளாஸ்டிக்)குக்கு தடை- தமிழக அரசு உத்தரவு

சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் மற்றும் சோப்புகள் போன்ற பொருட்களை பொட்டலமிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

சென்னை:

தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந் தேதியில் இருந்து பிளாஸ்டிக்கை ஒழிப்பதற்கான அரசு உத்தரவு நடைமுறைக்கு வந்தது. பிளாஸ்டிக் ஷீட், பிளேட், டீ மற்றும் தண்ணீர் கப், தண்ணீர் பாக்கெட், ஸ்ட்ரா, கேரி பேக், பிளாஸ்டிக் கொடி போன்றவை (எந்த அளவில் இருந்தாலும்) அவை தடை செய்யப்பட்டு இருந்தன.

அதே நேரத்தில் பால், உபபொருட்கள், எண்ணெய், மருந்து ஆகியவற்றை கட்டுவதற்கு பயன்படும் பிளாஸ்டிக், வெளிநாட்டு ஏற்றுமதிக்கு தேவையான பிளாஸ்டிக், மக்கக் கூடிய பிளாஸ்டிக் ஆகியவற்றுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அவற்றோடு, சிலவகை பொருட்களை தயாரித்து அவற்றை விற்பனைக்கு முன்பாக அடைத்து ‘பேக்’ செய்வதற்காக, அந்த பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வகைகளுக்கும் தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் அரசுக்கு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கடிதம் எழுதியிருந்தார். அதில், தமிழகத்தில் பிளாஸ்டிக் மாசு இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கான நோக்கத்தை, உற்பத்தி நிறுவனங்கள் ‘பேக்’காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் வகைகளால் நிறைவேற்ற முடியவில்லை. எனவே அவற்றை விதிவிலக்கு பட்டியலில் இருந்து நீக்கலாம் என்று கூறியிருந்தார். அவர் கேட்டுக்கொண்டபடி அந்த வகை பிளாஸ்டிக் வகைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த விலக்கு நீக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு ஜூன் 5-ந் தேதியில் இருந்து அமலுக்கு வருவதாக அந்த அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

இதன் மூலம் சிப்ஸ் போன்ற தின்பண்டங்கள் மற்றும் சோப்புகள் போன்ற பொருட்களை பொட்டலமிட பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

Related Tags :

Source: Maalaimalar

More from செய்திகள்More posts in செய்திகள் »